சட்டவிரோதமான புத்தாண்டு நிகழ்வில் 2500 பேர்! தடுத்த காவல்துறை!
புத்தாண்டு தினத்தன்று பிரான்சில் 2500 பேர் ஒன்றுகூடி ஒரு சட்டவிரோத களியாட்ட நிகழ்வை நடத்தியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற காவல்துறையினருடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வாய்த் தர்க்கத்திலும் மோதலிலும் ஈடுபட்டனர். பின்னர் மகிருந்து ஒன்றுக்கு தீ வைத்து போத்தில்களாலும் கற்களாலும் வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித் களியாட்ட நிகழ்வு பிரான்சின் பிரிட்டானியில் உள்ள ரென்னெஸ் அருகே லியூரானில் பயன்படுத்தப்படாத களஞச்சியசாலையில் புத்தாண்டு நாளான வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்டு சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.
பிரெஞ்சு கொவிட்-19 கட்டுப்பாடுகளின் கீழ் பொதுமக்கள் கூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் நாடு தழுவிய அளவில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இக்கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வில் கலந்துகொண்டோர் கடந்த வியாழக்கிழமை வணிக வாளாகத்தின் மகிழுந்து தரிப்பிடத்தில் ஒன்றுகூடி பின்னர் குழு லியூரான் நோக்கிச் சென்றுள்ளனர். பின்னர் புத்தாண்டுக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.