November 24, 2024

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில் திடீர் மாற்றம் கொண்டுவரும் அரசாங்கம்!

கனடாவில் விவசாயத் துறையில் பணியாற்றிவரும் தற்காலிக தொழிலாளர்கள் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்வதை பெரும்பாலான கனேடியர்கள் விரும்புவதாக புதிய கணிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு ஒக்டோபர் 28 முதல் நவம்பர் 1 வரை 18 வயதுக்கு மேற்பட்ட 1,039 கனேடியர்களிடம் நானோஸ் நடத்திய ஏழுமாற்றான கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவில் உள்ள தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் நிரந்தரைக் குடியுரிமை பெறுவதை தாங்கள் ஆதரிப்பதாக 10 இல் 8 கனேடியர்கள் தெரிவித்துள்ளதாக இந்தக் கருத்துக கணிப்பு கூறுகிறது.

அட்லாண்டிக் மாகாணங்களில் இதற்கான ஆதரவு வலுவாக உள்ள அதேநேரம் ப்ரேரி மாகாணங்களில் இதற்கான ஆதரவு சற்றுக் குறைவாகவே உள்ளதாகவும் ஆய்வு முடிவு கூறுகிறது.

கனடாவின் விவசாயத் துறைக்கு தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அவசியம் என்பதை பெரும்பான்மையான கனேடியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மற்ற தொழிலாளர்களைப் போலவே விவசாயத்துறைத் தொழிலாளர்களுக்கு நன்மைகள் மற்றும் பாதுகாப்புகள் கிடைக்க வேண்டும் என அவா்கள் விரும்புகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியர்கள் பெரும்பாலும் இந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கனடாவின் விவசாயத்துறை தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம், பருவகால விவசாயத் தொழிலாளர் திட்டம் போன்றன கனடாவின் விவசாயத்துறை வளர்ச்சிக்குப் பங்காற்றும் என 10-இல் 8 கனேடியர்கள் தெரிவிக்கின்றனர்.

கனடாவின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதில் விவசாயத் துறை முக்கிய பங்களிப்பு வழங்கும் என கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 97 வீதமானவர்கள் பேர் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் தற்காலிக விவசாயத்துறை தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை விரைவாக வழங்குவதற்கான வழி-வகைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் தற்காலிக தொழிலாளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவா் கூறியுள்ளார்.

குறிப்பாக விவசாய தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள் மற்றும் ஆதரவு தொழிலாளர்கள் போன்றோருக்கு கனடாவில் அதிக தேவை உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் சுகாதார-பாதுகாப்பு நடவடிக்கைகள், பயணக் கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக கடந்த ஆண்டில் கனடாவில் குடியேற்றங்கள் குறைத்துள்ளன.

இந்நிலையில் தொழிலாளர் சந்தையில் ஏற்படுள்ள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய ஆண்டுக்கு 4 இலட்சம் பேர் வீதம் 3 ஆண்டகளில் 12 இலட்சம் புதிய குடியேற்றவாசிகளை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.