ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் விளக்கம்!
மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் வி.மணிவண்ணன் தரப்பை யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் எமது ஆதரவை வழங்கினோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளர்ச்சிக்குழுவான வி.மணிவண்ணன் தரப்பு, ஈ.பி.டி.பியின் துணையுடன் இன்று ஆட்சியமைத்தது.
வி.மணிவண்ணன் தரப்பை ஈ.பி.டி.பி ஏன் ஆதரித்தது என அந்த கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு வினவியது.
“நாம் கட்சி ரீதியாக சிந்திக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து சிந்தித்தோம். மாநகரசபை நிர்வாகம் கலையும் அபாயமிருந்தது. அதனால் இரண்டு சபைகளிலும் செயற்பாட்டாளர்களை ஆதரிக்க முடிவெடுத்தோம்.
சிறப்பான வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து மககளிற்கு வழங்குவதே எமது நோக்கம்.
13வது திருத்தத்தை வலுப்படுத்த பல முறை தமிழ் கட்சிகளிற்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் யாரும் அதை கேட்கவில்லை. இன்று 13வது திருத்தம் ஆபத்தில் உள்ளது என்கிறார்கள். இருப்பதையாவது காப்பாற்றுங்கள் என கேட்கிறார்கள்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களிற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லையென எல்லா தமிழ் கட்சிகளும் இப்பொழுது சண்டை பிடிக்கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் அவசியத்தை அவர்கள் உணர்ந்ததாலேயே இந்த மாற்றம நிகழ்ந்தது.
இந்த அடிப்படையில் எமது உள்ளூராட்சி அலகுகளை பாதுகாக்கவும், மக்களிற்கு தேவையான திட்டங்களை மேற்கொள்ளவும் நாம் வாக்களித்தோம்“ என்றார்.
மணிவண்ணன் தரப்புடன் என்ன ஒப்பநதம் செய்தீர்கள் என வினவியபோது-
அப்படியான எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லையென்றார்.
பிரதி மேயர், உப தவிசாளர்களாக ஈ.பி.டி.பி உறுப்பினர்பன் தெரிவு செய்யப்படுவதென மணிவண்ணன் தரப்புடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்யப்பட்டதா என வினவியபோது-
அப்படியான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யவில்லை. உள்ளூராட்சி மன்றங்களில் உப தவிசாளர்கள் தாமே பதவிவிலகினாலேயே புதியவர்கள் நியமிக்கப்படலாம். நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அகற்றலாமென்பது தெளிவற்ற விிதமாகவே சொல்லப்பட்டுள்ளது. அதனால் பிரதி முதல்வர், தவிசாளர்கள் ஒன்றில் தாமே பதவி விலக வேண்டும். அல்லது, புதிய நிர்வாகத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.