மாகாணசபை பயனில்லை:மைத்திரி வழி தனி வழி?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நிலை உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களுக்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாண சபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின் போது தங்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இம்முறை தங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் நெருக்கடி தருவார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படாவிட்டால் பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு பொதுதேர்தலின் போது சிலமாவட்டங்களில் எங்கள் கட்சியினருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
களுத்துறை நுவரெலியாவில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன கம்பஹாவில் வெற்றிபெறக்கூடிய எங்கள் வேட்பாளர்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13வது திருத்தம் உருவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா என்பது குறித்து பார்க்கவேண்டும், மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 வருடங்களுக்குப் பின்னரும் மாகாண சபை முறை வெற்றியா? தோல்வியா? என்பதை நாங்கள் இன்னமும் உறுதிசெய்யவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைக்காகச் செலவிடப்படும் நிதி குறித்தும் கேள்விகள் எழுகின்றன என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை என்பதே எனது கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளில் நாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் உரிய பலாபலன்கள் கிடைக்கவில்லை, சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.