November 24, 2024

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கிறாரா விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கிறாரா விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து, எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் களமிறங்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்த, அவரும் இந்த விடயத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. கூட்டணியின் ஏனைய கட்சி தலைவர்களுடன் இதை அவர் ஆராய்ந்துமுள்ளார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலுள்ள ஆதவாளர்கள் சிலர் இந்த யோசனையை முன்வத்துள்ளனர். எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் அவர் இல்லாமல், அவரது கூட்டணி கரை சேர்வது சிரமம் என அவர்கள் கருதுகிறார்கள். கடந்த மாகாணசபை அட்சியில் “நேர்மையானவர்“ என்ற அபிப்பிராயத்தை மக்களிடமிருந்து அவர் பெற்றிருப்பதாகவும், அவர் களமிறங்கினால் சாதகமான பலனை பெறலாமென்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நாளுக்குநாள் முரண்பாடுகள் முற்றி, அணிகள் தோற்றம் பெற்று வரும் நிலையில், மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு மேலும் சறுக்களை சந்திக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.

கடந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் இளம் வாக்குகளை அங்கஜன் தரப்பு ஓரளவுக்கு தமது பக்கம் திருப்பியிருந்தாலும், அவருக்கு வாக்களித்ததில் பலனில்லையென்பதை நாளாக நாளாக மக்கள் உணர்ந்து கொள்கிறார்கள், அவர்கள் மக்களை “ஒருவித மயக்கத்திற்கு“ உட்படுத்தி வாக்குகளை பெற்றார்கள், வேலைவாய்ப்பு என சொல்லியிருந்தாலும், அதை செய்ய முடியவில்லை, எஞ்சிய காலத்திலும் செய்ய முடியாது, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவரை போல அங்கஜன் காண்பித்தாலும், அந்த பிரச்சனைகள் எழுந்த போது, அவர் இருக்கிற இடமே தெரியாமல் இருந்து விட்டார், தமிழ் மக்களிற்கு விரோதமாக கோட்டா அரசு செயற்படுகின்ற போதும், அங்கஜனால் எதிர்த்து மூச்சுக்கூட விட முடியவில்லை, இப்பொழுது மாவட்ட செயலகத்தின் மூலமாக அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் முன்வரிசையில் நின்று விளக்கு கொளுத்தினாலும், மக்கள் அதை புரிந்து கொண்டிருப்பார்கள் என அவர்கள் கருதுகிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, சாதாரண மக்கள் மத்தியில் கஜேந்திரர்கள் தொடர்பான எதிர்மறை அப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளமை தமக்கு வாய்ப்பாகும் என்றும் கருதுகிறார்கள்.

விக்னேஸ்வரன் மாகாணசபை தேர்தலிற்கு வந்தால், அருந்தவபாலன் நாடாளுமன்றம் செல்வார். விக்னேஸ்வரன் மாகாணசபையை வென்றால், இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியை போல செயற்படுவார்கள் என அவர்கள் கணக்குப் போட்டுள்ளனர்.

இந்த திட்டம் குறித்து விக்னேஸ்வரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் தற்போது ஆலோசனை கேட்டு வருகிறார்.

அந்த ஆலோசனையை ஏற்பாராக இருந்தால், மாகாணசபை தேர்தல் வேட்புமனு சமர்ப்பிப்பதற்கு முன்பாக அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.