எல்லை கிராம காணி சுவீகரிப்பை தடுக்க கோரிக்கை?
எல்லை கிராம காணி சுவீகரிப்பை தடுக்க மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களின்; காணிப் பயன்பாட்டுக்குழுக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிகளையும் உள்ளீர்க்குமாறு, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (22) நடைபெற்ற முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பிரதேச மற்றும் மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுக் கூட்டங்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாததால,; மக்களின் காணிகள் பலவும் அபகரிக்கப்படுகின்றன எனவும் மேலும் அபகரிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.
காணி பயன்பாட்டுக் குழுக் கூட்டங்களில், திணைக்கள அதிகாரிகள், படையினர் போன்றோர் இணைந்து காணி தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், இந்நிலையில் படையினர் மக்களின் காணிகளை கோருகின்றபோது அரச அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கின்ற நிலை காணப்படாதெனவும் கூறினார்.
எனவே, மக்கள் பிரதிநிகளும், காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்பட வேண்டுமென்று, ரவிகரன் கோரினார்.