காளியையாவது விட்டுவிடுங்கள் :மனோ!
கொரொனாவுக்கு „பாணி மருந்து“ கண்டு பிடித்துள்ளதாக, அரசின் சில அமைச்சர்களால் மகிமை படுத்தப்பட்டு ஓடித்திரியும் „பாணி தம்மிக“ என்ற „நாட்டு வைத்தியரை“ சில தேரர்கள், „தேசிய மோசடிக்காரன்“ என்கிறார்கள். சிலர், „தேசிய வீரன்“ என்கிறார்கள்.
எனக்கு இதில் அக்கறை இல்லை. ஆனால் இவர் இந்து கடவுளான காளியம்மனை பற்றி பேசுவதை உடன் நிறுத்த வேண்டும் என தமுகூ தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது பற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது;
நான் இந்த „நாட்டு வைத்தியரின்“ பாணி மருந்தை இதுவரை குடிக்கவில்லை. இனிமேல் குடிக்கும் எண்ணமும் இல்லை.
எங்கள் வீட்டில் கொரோனா நோய் தொற்று இதுவரை வராமைக்கு காரணம், எங்க வீட்டு „சித்த வைத்திய“ பானங்கள்தான்.
இவை நாம் எப்போதும் பாரம்பரியமாக எங்கள் பூட்டன், பூட்டி காலத்திலிருந்து பின்பற்றி வரும் இயற்கை மருந்து பானங்கள்.
இங்கே எனது பிரச்சினை என்னவென்றால், இந்த „பாணி தம்மிக“ என்ற நாட்டு வைத்தியர், தனக்கு துணையாக இந்து கடவுள் „காளியம்மனை“ பெயரிட்டு உள்ளதாகும். இவர் தனக்கு காளியம்மன் அருள் பாலித்திருப்பதாக கூற, இவரை எதிர்ப்போர் காளியம்மனையும் சேர்த்து விமர்சிக்கிறார்கள்.
அனுராதபுர, „அடமஸ்தான“, பெளத்த தலத்தில் போய் இவர் இப்படி சொல்ல, அங்குள்ள பிரதம தேரர், இவரை அவரது „பாணி மருந்துடன்“ விகாரையின் மேலே படியேறி போக அனுமதிக்கவில்லை.
காளியம்மனை இதில் இழுத்து விடுவது நிறுத்தப்பட வேண்டும். காளியம்மன், பார்வதி தேவியின் ஒரு அவதாரம். பார்வதி, இந்துக்களின் மூத்த தாய்க்கடவுள்.