யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நாளை 15ம் திகதி, முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாட்டில் எழுந்துள்ள கொரோனா பெருந் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், மாணவர்களின் நன்மை கருதி, சுகாதாரப் பகுதியினரின் அனுமதியுடன், தேவையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான செயற்றிட்டப்பணிகளும், செயன்முறை வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மாவட்டத்துக்கு வெளியில் இருந்து, தனிப்பட்ட பயண ஒழுங்குகளுடன் அழைத்து வரப்பட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவி விடுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாளை முதல் இறுதியாண்டு ஆய்வுக்கான செயற்றிட்டப் பணிகளும், செயன்முறை வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விடுதியில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதற்கும், மாணவர்களை மீள விடுதிக்குக் கொண்டு செல்வதற்குமான பயண ஏற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், பல்கலைக்கழக கொரோனா தடுப்பு – முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான சுகாதாரக் குழுவின் அறிவுறுத்தல்களுக்கமைய வகுப்புகளும், செயன்முறை அமர்வுகளும் இடம்பெறவுள்ளன என்று உள்ளது.