போர்களை வென்று யுத்தத்தில் தோற்றவர்களே தமிழ் அரசியல்வாதிகள்!
அரசாங்கத்தின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தாம் பாதீடு மீதான வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை.
அத்துடன் இணக்க அரசியல் என்று கூறி சுயநலவாதிகள் இணக்க அரசியல் செய்து வந்ததால் எமது மக்கள் கண்ட நன்மை ஒன்றுமில்லை.
20வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தேன்.
பொதுவாக எதிர்த்து வாக்களிப்பதே எனது நிலைப்பாடு என்று பலர் எண்ணுகின்ற போதிலும் நான் அவ்வாறு எண்ணவில்லை.
எதிர்க்கட்சிகளின் கடமை அரசாங்கத்தை எந்த நேரமும் எதிர்ப்பதே என்ற கருத்தை ஏற்கமாட்டேன்.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சரியான திசையில் பயணிக்க வழி நடத்த வேண்டும் என்பதே எனது கருத்து. அரசாங்கம் பெரும்பான்மை நிலையைப் பெற்றுள்ளது.
நாங்கள் அவர்களுக்கு எதிராக வாக்களிப்பதும் நடுநிலைமை வகிப்பதும் ஒன்று தான். ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தச் செயலோ பேச்சோ அர்த்தமற்றது.
ஆகவே நான் வாக்களிக்காமல் இருப்பதே மேல் என்று எண்ணினேன்.
தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு அரசியலைக் காட்டி வந்த முன்னைய அரசியல்வாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலையே வெளிப்படுத்தி வந்திருந்தார்கள்.
அவர்களை எதிரிகளாகவே அப்போதைய அரசாங்கத்தினர் பார்த்தார்கள்.அதனால் அவர்களுடன் அரசாங்கங்களும் பேசவில்லை. இவர்களாலும் அவர்களுடன் பேசமுடியவில்லை. நான் அவ்வாறு எனது காலத்தைத் தொடங்க விரும்பவில்லை.
எமது அரசியல் கைதிகள் பற்றி அரசாங்கத்துடன் பேச வேண்டி இருக்கின்றது. ஒரு புதிய அரசியல் யாப்பு நிர்மாணத்தை நாம் எதிர் கொண்டுள்ளோம். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் எமது வாக்குகளுக்குப் பலம் இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் தமது வாக்கை மக்கள் நலன் கருதிப் பாவிக்கவில்லை.
அரசாங்கம் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி ஆகியோருடன் பேசுவதென்றால் பக்கச் சார்பில்லாமல் இருப்பதே பொறுத்தமானது என்று நான் கண்டு கொண்டேன்.
தமிழ் அரசியல்வாதிகள் இதுவரையில் போர்களை வென்று யுத்தத்தைத் தோற்றுவிட்டார்கள். மக்களின் தற்போதைய ஒன்றுபட்ட குறிக்கோளை அடைவதே எமது இலக்காகும். அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதோ வாக்களிப்பதோ முக்கியம் இல்லை.
அரசாங்கத்தின் மனதை மாற்றுவது எம் சார்பாக அவர்களைத் திசை மாற்றுவதே எனது கடமையும் கடப்பாடுமாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.