November 22, 2024

ஷானி அபேசேகரவை நிரந்தரமாக சிறையிலடைக்க சதி?

ராஜபக்சக்களின கொலைகளை பற்றி கண்டறிந்த ஷானி அபேசேகரவை நிரந்தரமாக சிறையிலடைக்க சதிகள் பின்னப்பட்டுவருகிறது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு வெளிநாட்டிலுள்ள பெண்ணொருவருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி என தன்னை அடையாளப் படுத்திக்கொண்டு தொலைபேசியில் அழைத்த நபர் ஒருவர், ஷானி அபேசேகரவுக்கு எதிராக முறைப்பாடு செய்ய தன்னிடம் கோரிக்கை முன்வைத்தார் என சுவீடனிலுள்ள இலங்கைப் பெண் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் சமிலா மதநாயக்க எனும் பெண் தெரிவித்தவை வருமாறு:

‘என்னுடன் தொலைபேசியில் பேசியவர்: நீங்கள் ரவி வைத்தியலங்காரவுக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளீர்கள் அல்லவா? என வினவினார்.

நான் ஆம் என கூறினேன். அதன் பிறகு யாரிடம் அந்த முறைப்பாட்டை முன்வைத்தீர்கள் என அவர் கேட்டார். நான் ஷானி அபேசேகரவிடமும், அப்போது சி.ஐ.டி. பிரதானி ரவி செனவிரத்னவிடமும் முறையிட்டேன் எனக்கூறினேன்.

அதன் பின்னர், திடீரென, ஷானி அபேசேகர அந்த முறைப்பாட்டை மூடிமறைத்துள்ளார் என எமக்கு முறைப்பாடு வழங்க முடியுமா? என அந்த நபர் கோரினார். நான் உடனடியாகவே அதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.

அத்துடன் நான் முன்வைத்துள்ள முறைப்பாடு மீது விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைத்தேன் எனத் தெரிவித்தார்.