கவலை மேல் கவலை!! ஒன்றுமை குறித்து புலம்பும் செல்வம்!!
மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில்வெற்றிபெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போதுட:
மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தில் பிரச்சினை இருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.மாநகரசபை வரவு செலவு திட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து வாக்களிப்பார்கள் என்ற முடிவினை எட்டியுள்ளோம்.
இன்றைய அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டுவருகின்றது. இந்தநிலையில் தமிழர்களின் ஒற்றுமையென்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
இன்று தமிழர்களின் பூர்வீக இடங்கள் பல்வேறு திட்டங்கள் என்ற பெயரில் அபகரிக்கும் சூழ்நிலையேற்பட்டுள்ளது. மகாவலி, தொல்பொருள், வன இலாகா போன்ற திணைக்களங்களை வைத்துக்கொண்டு கபடத்தனமாக தமிழர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுவருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயவின் திட்டங்களை பார்க்கும்போது தமிழர்கள் பூர்விக வரலாற்றினைக்கொண்ட வடகிழக்கு பிரதேசம் அந்த மக்களை சிதைக்கின்ற நிலங்களை அபகரிக்க மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையினை இன்று காணமுடிகின்றது.
கொரோனா காலத்தில் இராணுவத்தின் பிரசன்னம், நேர்முகத்தேர்வுகளின் போது இராணுவத்தினது பிரசன்னம், அரச உயர் பதவிகளில் இராணுவ உயர் அதிகாரிகளை நியமிக்கும் நிலைமைகள், முப்படைகளையும் கொண்டு ஆளும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழர்கள் பிரிந்து நின்று கட்சி ரீதியாக செயற்படுகின்றபோது அது இன்னும் இந்த அரசாங்கத்திற்கு பிரித்தாளும் தன்மையினையே ஏற்படுத்திக்கொடுக்கும். இன்று மட்டக்களப்பில் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றவர்கள் மட்டக்களப்பில் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் பேசலாமே தவிர செயல்வடிவத்தில் எதனையும் செய்யமுடியாது. கூடுதலான வாக்குகளை தமிழ் மக்களிடம் இருந்து பெற்றவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியாத நிலையே உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை கால்நடைவளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் பெரும் பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கம் மிக மோசமான முறையில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேய்ச்சல் தரை பகுதிகளில் முன்னெடுத்துவருகின்றது. இதனை தடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உhயி தரப்பினருடன் பேசினோம். ஆனால் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அதற்கான சரியான தீர்மானத்தினை எடுக்கவில்லை. அரசாங்கத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது சரியான வேலைகளை செய்யவேண்டும்.
தமிழ் தேசியத்துடன் இருக்கும் கட்சிகள் உளப்பூர்வமாக மக்களின் உரிமைக்காக செயற்படும் கட்சிகளாக இருக்குமானால் ஒற்றுமையாக செயற்படவேண்டும். அரசாங்கத்துடன் இருப்பவர்களை நாங்கள் ஒன்றும் கூறமுடியாது. தமிழ் தேசியத்துடன் செயற்படும் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பாடும் காலம் தற்போது உருவாகியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமாகவிருந்தால் கொள்கையில் ஒன்றுபட்டுள்ள நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஒன்றுபடமுடியாது. அவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும். இன்று தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் கூடி முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் வடகிழக்கில் ஒன்றிணைந்து செயற்படும் இந்த காலத்தினை தவறவிடுவோமானால் தமிழர்களின் பூர்வீம் வரலாறு, தமிழர்களின் போராட்டம், இறையாண்மை அத்தனையும் இழந்து எங்களையெல்லாம் வந்தேறு குடிகளாக மாற்றும் சிங்களத்தின் கருத்துகளுக்கு துணைபோனதாக அமையும்.
மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தடைசெய்யவேண்டும் என்று கூறுகின்ற அமைச்சர்களையே இன்று இந்த பாராளுமன்றம் கொண்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தொடர்பாக மிக மோசமான சிந்தனைகளை கொண்டுள்ளார்கள் என்பதை கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் உணரமுடிந்தது.
மூன்று நேரம் உணவு கொடுத்தால் தமிழ் மக்களுக்கு போதும் என்று முக்கியமான அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.தமது உரிமைக்காக போராடிய இனம்,தமது உரிமைக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இனம் தமிழினம். ஆனால் அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மிக சாதாரணமாக தமிழ் மக்களுக்கு மூன்று நேர உணவு கொடுத்தால்போதும் என்று கூறுகின்றார். மூன்று நேர சாப்பாடு பிச்சையெடுப்பவனும் சாப்பிடுவான்.
இந்த அரசாங்கம் கடந்த காலத்தில் தமிழர்களை படுகொலைசெய்து இன்று ஐநா மனித உரிமைகள் சபை உட்பட சர்வதேச நாடுகளினால் குற்றஞ்சாட்டப்படும் அரசாங்கமாகவுள்ளது. இன்று பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். பீல்ட்மார்சலாக இருக்கின்ற சரத்பொன்சேகா உட்பட பலர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அவரும் இன்று கூறுகின்றார் இந்த புயல் மாவீரர் தினமன்று வந்திருக்கவேண்டும் என்று. இவருக்கு வாக்களித்ததற்கு இன்று தமிழ் மக்கள் வெட்கப்படுகின்றார்கள். இவ்வாறான சிந்தனையுடன்தான் இன்று பாராளுமன்றம் இருக்கின்றது.
நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக்கொண்டுள்ளோம். நாங்கள் என்ன செய்தாலும் யாருக்கும் அச்சப்படத்தேவையில்லையென கூறுகின்றார்கள். நிச்சயமாக இவர்கள் சர்வதேசத்திடம் பகைத்துக்கொண்டால் தன்னிறைவுகொண்ட நாடாக மாறாது. இவர்களினால் சர்வதேசத்தினை பகைத்துக்கொண்டு ஒருபோதும் செயற்படமுடியாது.
சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்களின் பிரச்சினைகளில் முனைப்புக்காட்டிவருகின்றது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமாக பல வழிகளிலும் தமிழ் மக்களின் இறையாண்மையினையும் பரவலையும் தடுக்கின்ற வகையில் செயற்படுகின்றது.
நாங்கள் இந்தவேளையில் ஒற்றுமையாக செயற்படமுன்வரவேண்டும். அரசியலமைப்பு புதிதாக எழுதப்படப்போவதாக சொல்கின்றார்கள். நாங்கள் இந்தவேளையில் தனித்தனியாக செயற்படுவதை விட இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களையும் தமிழ் மக்களின் சகல விடயங்களையும் உள்ளடக்கியதான ஒரு தீர்வு திட்டத்தினை அனைவரும் இணைந்து வழங்கவேண்டும். அதற்கு நாங்களும் தயாராகயிருக்கின்றோம். இந்த நிலையில் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் தங்களது சுய விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக செயற்படுவதாக இருந்தால் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் மக்களின் உரிமைசார்ந்து செயற்படும் கட்சிகள் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக சிந்திப்பதாக சொல்லிக்கொண்டு கட்சி பதிவு விடயத்திலும் கட்சி சீரமைப்பு விடயத்திலும் தட்டிக்கழிக்கின்ற செயற்பாடுகள் தொடருமானால் அது மக்களின் நலன் என்று பார்க்கமுடியாது. இதனை எல்லாரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக பயணிக்கும் கட்சிகளுடன் தொடர்ந்து பயணிப்பதே தமிழ் மக்களுக்கு சாதகமான விடயமாகஇருக்கும். மற்றவர்களை ஒற்றுமையாக்கிகொண்டுவந்து அதில் தங்களின் தனித்துவத்தினை காட்டமுற்பட்டால் அதில் எந்தவெற்றியும் பெறமுடியாது.
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கட்டாயமாகும். ஏற்கனவே எட்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துகொண்டுள்ளும் சூழ்நிலையுள்ளது. அதனை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளீர்க்கலாமா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் செயற்படமுடியுமா என்பது தொடர்பில் சிந்தித்துவருகின்றோம். எது எவ்வாறு என்றாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.இதனை அனைவரும் உணர்ந்துசெயற்பட வேண்டும்.