சம்பந்தன் + அஜித் + கோதபாய புலம்பெயர் தமிழர் செயற்பாடு!பனங்காட்டான்
கொழும்பில் மகிந்த, கோதபாய, கமால் குணரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இறுதி நேரத்தில் கூட்டமைப்பின் சம்பந்தனையும் தனிமையில் சந்தித்தார். இது ஒரு சாதாரண சந்திப்பல்ல. இந்தச் சந்திப்பின் பின்னால் கோதபாயவின் வழிநடத்தல் இருந்ததாக இந்திய வட்டாரங்களில் செய்தி கசிந்துள்ளது. இச்சந்திப்பின் ஊடாக கோதபாய எதனை எதிர்பார்க்கிறார்?பத்தாண்டுகளுக்குப் பின்னர் கொழும்பு நாடாளுமன்றம் தமிழ்த் தேசிய உரைகளாலும் அதனை சீரணிக்க முடியாத எதிர்வீச்சுகளாலும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
திலீபன் நினைவேந்தல் நாட்களுடன் ஆரம்பமான வரலாற்றுப் பதிவுகளை நாடாளுமன்றப் பதிவேடு உள்வாங்குகிறது. இதனாலோ என்னவோ விடுதலைப் புலிகள் என்பது நாடாளுமன்றத்தில் தினமும் உச்சரிக்கப்படுவதை தினமும் அவதானிக்கலாம்.
விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று ஒருதரப்பும், விடுதலைப் புலிகளின் போராட்டம் முன்வைத்த கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லையென மறுதரப்பும் கூறுகின்றன. இங்குதான் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனோர், கொல்லப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் சொல்லப்படுகிறது.
யுத்த காலத்தில் மன்னார் ஆயராகவிருந்த ராயப்பு ஜோசப் ஆண்டகை அச்சொட்டாக புள்ளி விபரமிட்டு மக்கள் தொகையை வெளியிட்டிருந்தார். இதனை சிங்கள தரப்பு எப்போதுமே மறுத்து வந்துள்ளது.
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்த புள்ளிவிபரமே முக்கிய ஆவணமாக அமைந்தது. அதிலிருந்து சர்வதேச விசாரணைக்கான முன்னெடுப்பு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதனை கோதபாய அரசு நிறைவேற்ற மறுத்து நிராகரித்துள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்கா, இலங்கையின் ராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு பயணத்தடை விதித்துள்ளதை மறுத்துரைத்து தட்டிக் கேட்க முடியாதுள்ளது கோதபாய அரசு. இவ்விடத்தில் கடந்த வாரங்களில் முள்ளிவாய்க்காலை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட சில நாடாளுமன்ற உரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கையின் 54 ராணுவ அதிகாரிகளுக்கு பல வெளிநாடுகள் பயணத்தடை விதித்து விசா வழங்க மறுத்துள்ளன என்று அரசாங்க தரப்பு எம்.பி. ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இதனைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது தொடர்பான கேள்வியொன்றை பின்வருமாறு தமது நாடாளுமன்ற உரையில் எழுப்பியிருந்தார்:
’54 ராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான விசா ஏன் வழங்கப்படவில்லையென்பதை சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் அப்பாவிகள் என்றால் அதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அவர்கள் போர்க்குற்றவாளிகள் இல்லையென்று நீங்கள் கூறுவது உண்மையென்றால் சர்வதேச விசாரணைக்கு ஏன் தயங்குகிறீர்கள், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதைவிட சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகிறீர்கள்?“ என்பது கஜேந்திரகுமாரின் கேள்வி.
இதன் தொடர்ச்சியாக சி.வி.விக்னேஸ்வரன் தமதுரையில் பின்வரும் விடயத்தை சுட்டியிருந்தார்: ‚விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தினார்களென்றும், படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச விசாரணைக்கு தயங்குகிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் அது நிரூபிக்கப்பட்டு உங்கள் மீதான விமர்சனங்கள் களையப்பட வேண்டும். ஆனால் உண்மை மாறாக இருக்கிறது. அதனால்தான் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க நீங்கள் அஞ்சுகிறீர்கள்“ என்று விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் நாடாளுமன்றத்தில் எழுப்பிய விடயங்களை வெறுமனே அர்த்தமற்ற விடயங்களாக அரச தரப்பு தள்ளிவிட முடியாது. சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுத்து தாங்கள் நிரபராதியென்றால் அதனை நிரூபிக்க வேண்டும். ஆனால், கோதாபய அரசு சீனாவை பலமாக வைத்துக் கொண்டு சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
வரவு செலவுத் திட்ட நாடாளுமன்ற அமர்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் உரையும் பதிவுக்குட்பட்டது. மூன்று மொழிகளிலும் சரளமாக பேசும் இவர் தற்போதைய அரசு தனது இயலாமையை மூடிமறைப்பதற்காக தமிழ்- முஸ்லிம் மக்களை, அவர்களின் உரிமைகளை, பாரம்பரிய பண்பாடுகளை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாகச் சாடினார். அதேசமயம் அரசுக்கு முண்டுகொடுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளை சாடவும் அவர் தவறவில்லை. தமிழரை ஒருபோதுமே எவராலும் அழிக்க முடியாது என்ற அவரது குரலும் அவையில் ஓங்கி ஒலித்தது.
சாணக்கியன் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு எம்.பியான எம்.ஏ.சுமந்திரன் தமது நாடாளுமன்ற உரையில், இலங்கையின் நீதிபரிபாலன கட்டமைப்பில் நம்பிக்கையில்லாது போனதால்தான் தமிழர்கள் சர்வதேச விசாரணையைக் கோர நேர்ந்தது என்றுரைத்தார்.
இதற்காக திருமலை மாணவர் ஐவர் படுகொலை, கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்கள் கொலைகள் போன்றவற்றை உதாரணமihக எடுத்துக்கூறிய சுமந்திரன், ஏனோ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை குறிப்பிடாது விட்டார். கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் ஏற்கனவே இதனைத் தொட்டுவிட்டதால் தாம் குறிப்பிட வேண்டியதில்லையென எண்ணியிருக்கலாம். அல்லது, விடுதலைப் புலிகளின் போராட்ட வழிமுறையை தாம் ஏற்கவில்லையென்பதால் அதனைத் தவிர்த்தும் இருக்கலாம்.
இப்பொழுதெல்லாம் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் அரைகுறையாகவாயினும் ஒருவகை ஒற்றுமையைக் காட்டுவதை அரசியல் அவதானிகளும் தமிழ் ஊடகங்களும் சுட்டிக்காட்டி வருகின்றன. இது வரவேற்கத்தக்கது மட்டுமன்றி தொடரவேண்டியதும்.
யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா இன்னொரு அரைகுறையான தமிழ் தேசிய கட்சிகள் கூட்டை உருவாக்கி என்னென்னவோ அறிவித்து வருகிறார். தோற்றவர்களின் கூட்டு என்றும், வரப்போகின்ற மாகாண சபைகளுக்கான கூட்டு என்றும் அவ்வப்போது விமர்சனங்களுக்குக் குறைவில்லை.
நாடாளுமன்றத்தை மையப்படுத்திய தமிழ் எம்.பிக்களின் முக்கிய ஆவண இணைப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் பதின்மூன்று எம்.பிக்களுடன், தமிழர் முன்னேற்ற முன்னணியின் எம்.பிக்களான மனோ கணேசனும் வே. இராதாகிருஸ்ணனும் ஒப்பமிட்டது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1994ல் கைதாகி தொடர்ந்து சிறையில் இருக்கும் அறுபதுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரும் இந்த ஆவணத்தை நான்கு எம்.பிக்கள் எடுத்துச் சென்று மகிந்தவிடம் கையளித்தனர்.
அவர் பிரதமராக இருப்பதால் அவரால் ஏதாவது செய்ய முடியுமென தமிழ் எம்.பிக்கள் நினைக்கிறார்கள் போலும். பாவம் மகிந்த! கிடைத்த கதிரையை காப்பாற்றிக்கொள்ள அவர் படும்பாடு அவருக்குத்தான் தெரியும். கோதபாய இன்றி ஓர் அணுவும் அசையாது என்கின்ற இன்றைய ஆட்சியில் மகிந்தவிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை ஆவணம் எங்கு போகும்? வழக்கமாக ஆணைக்குழு அறிக்கைகள் வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிதான் இதற்கும் தங்கிடம்.
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலின் இலங்கை விஜயத்தின்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் இடம்பெற்ற முப்பது நிமிட பேச்சுவார்த்தை தொடர்பாக சில தகவல்கள் இப்போது கசிந்துள்ளன. மாவீரர் நாளுக்கு மறுநாள் – நவம்பர் 28ம் திகதி அஜித் டோவால் கொழும்பு சென்றிருந்தார். அன்றைய தினமே தனித்தனியாக மகிந்த, கோதபாய, கமால் குணரட்ன ஆகியோரை சந்தித்தார்.
நவம்பர் 29 ஞாயிறன்று இந்தியா திரும்புவதற்கு முன்னர் சம்பந்தனை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்துக்கு அழைத்து உரையாடினார். இச்சந்திப்பு அஜித்தின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சந்திப்பின் பின்னரான அதிகாரபூர்வ அறிக்கையிலும் இச்சந்திப்பு பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் சம்பந்தன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் வடக்கு – கிழக்கின் தற்போதைய நிலைமைகள் பற்றி உரையாடப்பட்டதாக பட்டும்படாமலும் கூறியிருந்தார்.
புதுடில்லியுடன் தொடர்புடைய தமிழகத்து வட்டாரங்களின் சில முக்கிய பிரமுகர்களுக்கு இச்சந்திப்பு தொடர்பான சில தகவல்கள் நம்பகமான முறையில் கசிய விடப்பட்டுள்ளது.
கோதபாயவின் ஆலோசனையின் அல்லது வேண்டுதலின் பேரிலேயே அஜித் டோவால் சம்பந்தனை சந்திக்க நேர்ந்தது. இச்சந்திப்பு இருவருக்குமிடையில் தனிமையிலேயே இடம்பெற வேண்டுமென்பது முக்கியமான நிபந்தனையாக இருந்தது. (சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரும் சம்பந்தனை தனிமையிலேயே சந்தித்தது ஞாபகமிருக்கலாம்.)
மார்ச் மாத ஜெனிவா அமர்வின்போது இலங்கை அரசு மேற்கொள்ளவிருக்கும் நகர்வில் கூட்டமைப்பின் அணுகுமுறையை அறிந்துகொள்ள இச்சந்திப்பு அவசியமாக இருந்தது. இவ்விடயத்தில் தாயகத்திலுள்ள மற்றைய தமிழ் தேசிய கட்சிகளினதும் புலம்பெயர் தமிழர் தரப்புகளினதும் நிலைமைகளை இந்தியா அறிந்துகொள்ள இச்சந்திப்பு தேவையாக இருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளங்களை கண்காணிக்க அல்லது அவதானிக்க இது அவசியமானது.
இதன் தொடர்ச்சியாக, கொழும்பிலுள்ள கனடிய மற்றும் பிரித்தானிய தூதுவர்களை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்து, இந்த நாடுகளில் விடுதலைப் புலிகள் தரப்பு கட்டமைப்புகளின் எழுச்சி பற்றி எடுத்துக்கூறியதை சும்மா அல்லது சாதாரண விடயமாக கழித்துவிட முடியாது.
கோதபாய அரசின் பார்வை, சம்பந்தன் – அஜித் ஊடாக புலம்பெயர் தமிழர் மீது ஆழமாக்கப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா?