இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும்
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் எவருமே அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளை நோக்கிக் கேள்வி தொடுக்கவில்லை.
அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இலங்கைப் படையினருக்கு ஏன் பயிற்சியளிக்கிறீர்கள் என்றோ? அல்லது ஏன் நிதியுதவி செய்கிறீர்கள் என்றோ கேள்வி எழுப்பவில்லை. 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 35ஆயிரத்து 515 கோடியே 50ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டமை குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் காரசாரமாகக் குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஆனால் இவர்கள் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளையும் ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளையும் நோக்கிக் கேள்வி எழுப்பவில்லை. இந்தோ- பசுபிக் பிராந்திய நலன் மற்றும் பாதுகாப்புப் போட்டியில் இலங்கையைத் தம்பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே 2009ஆம் ஆண்டு ஈழப்போரை இல்லாதொழிக்க இந்த நாடுகள் இலங்கை இராணுவத்திற்கு உதவியளித்திருந்தன என்பது கண்கூடு.
ஈழப்போர் முடிவுக்கு வந்துவிட்டால் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தனது பொருளாதார நலனை முன்னெடுக்க முடியுமெனக் கருதியே சீனாவும் அன்று போருக்கு உதவியிருந்தது. ஆயுத உதவியளித்த நாடுகள் பற்றி அவ்வப்போது அமைச்சர்கள் பலரும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுமிருந்தனர்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், இலங்கை இராணுவத்துக்குச் சீன அரசு நிதியுதவி வழங்கியது என்பதைவிட அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இந்தியா ஜப்பான போன்ற நாடுகளும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கியதோடு கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறான உதவிகள், கூட்டுப் பயிற்சிகள் என்பது இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டவை என்பது வெளிப்படை. 2009ற்குப் பின்னரான புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்தியே இலங்கை தமது முப்படைகளையும் நவீனமயப்படுத்தி வருகின்றது. பிராந்தியப் பாதுகாப்பு உதவிகளை நன்கு பயன்படுத்தியே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியுதவிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இலங்கைப் படையையும் இலங்கைப் படைத் தளங்களையும் பலப்படுத்தினால், இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்கு அது உகந்தது என்ற கோணத்திலேயே அமெரிக்கா. ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் கருதுகின்றன ஆனால் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தியே 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலும், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்களை இலங்கை ஒற்றையாட்சி அரசு முடக்கி வருகிறது என்பதை தமிழ்த்தேசியக் கட்சிகளால் அம்பலப்படுத்த முடியவில்லை.
2018ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கக் காங்கிரஸ் அனுமதியோடு 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அப்போதைய பேச்சாளர் ஹீதர் நொயட், இந்து சமுத்திர வலய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறியே இந்த உதவியை அன்று வழங்கியிருந்தார். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010/11 ஆம் ஆண்டுகளில் இலங்கைப் படைக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள், கடற்படைக் கூட்டுப் பயிற்சிகளுக்கு இலங்கை முன்னுரிமையளிக்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. 2012ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்திருந்த இலங்கை குறித்த கடுமையான பிரேரணைகூட அந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டதென்ற கருத்தும் உண்டு.
2009ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென அமெரிக்க, இந்திய அரசுகளுக்கு அப்போதைய ராஜபக்ச அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இந்தத் தகவலை சம்பந்தன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்த பின்னர் நிரந்த அரசியல் தீர்வு கிடைக்கும் என்று அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் 2009ஆம் ஆண்டு தன்னிடம் கூறியதாகவும், ஆனால் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் சம்பந்தன் கவலை வெளியிட்டிருந்தார். அதாவது அமெரிக்காவையும் இந்தியாவையும் இலங்கை ஏமாற்றிவிட்டதென்ற தொனி சம்பந்தனின் உரையில் வெளிப்பட்டது.
ஆகவே அந்த உறுதிமொழி உரியவாறு நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையிலேயே இந்திய அரசின் ஒத்துழைப்போடு 2012இல் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் பிரேரணை கொண்டுவரப்பட்டதென்ற முடிவுக்கு வரமுடியும். அந்தப் பிரேரணையின் பின்னரான சூழலிலேயே ராஜபக்ச அரசாங்கம், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அதிகளவில் ஒத்துழைக்க ஆரம்பித்தது என்றொரு கதையும் உண்டு.
அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையின் தனித்துவம் பேணப்பட வேண்டுமென்ற நிபந்தணை ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் அன்றைய சூழலில் புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் முன் எச்சரிக்கையாக பேசப்பட்டு இருந்தது.
ஆனாலும் தமக்குரிய நம்பிக்கையாளர்கள் எனக் கருதி 2015 ஆம் ஆண்டு பதவிக்குக் கொண்டுவரப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேயே இலங்கைப் படையினருக்கு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் அதிகளவு நிதியுதவிகளை வழங்கியிருந்தன. அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளையும் வழங்கியிருந்தன. அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு இலங்கையின் கடற்படைக்கு 2016 இல் இருந்து பயிற்சியளித்துள்ளது.
அமெரிக்க இலங்கை கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனைப் பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 என்ற கூட்டுப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அப்போதைய ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே (Kazuyuki Nakane) கொழும்பில் வைத்து நேரடியாக வழங்கியிருந்தார்.
2018ஆம் ஆண்டுதான் இலங்கைப் படையினருக்கான உதவிகளும் கூட்டுப் பயிற்சிகளும் கூடுதலாக வழங்கப்பட்டிருந்தன. திருகோணமலைக் கடற்படைத் தளத்திலேயே இந்தப் பயிற்சிகள் இந்த ஆண்டும் இடம்பெற்றிருந்தன.
2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 290 பில்லியன் ரூபா இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 306.1பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில், 2019ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி மதிப்பீட்டின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்குரிய நிதி செலவுகள் செய்யப்பட்டிருந்தன.
2017, 2018ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை இராணுவத்துக்கு வழங்கிய நிதியுதவிகள், ரோந்துப் படகுகள். மற்றும் கூட்டுப் பயிற்சிகள் குறித்து கொழும்பில் உள்ள அந்த நாடுகளின் தூதரகங்கள் வெளியிட்ட அறிக்கைகளில் இருந்தே அறியமுடிந்தது.
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதற்கான வெளிநாட்டு நிதியுதவிகள் பற்றி இலங்கைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வது கடினமானது. ஏனெனில் இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்ற காரணம் கூறப்படும்.
ஆனால் நாடாளுமன்றத்தில் அரை மணித்தியாலம் நடைபெறும் கேள்வி நேரத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் உதவிகள் பற்றியும் கேள்வி எழுப்ப முடியும். அது நாடாளுமன்ற சிறப்புரிமை.
ஆனால் தமிழ் உறுப்பினர்கள் அவ்வாறு கேட்பதேயில்லை. பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில்கூட அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கைக் படையினருக்கு வழங்குகின்ற நிதியுதவிகள் கூட்டுப் பயிற்சிகளுக்கான காரணங்கள் பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கலாம்.
அப்படிக் கேள்விகள் தொடுக்கப்படும்போது தேசிய பாதுகாப்புப் பற்றிய தகவல்களை வெளியிட முடியாதென அரசாங்கம் மறுக்கவும் கூடும் அப்படி மறுத்தால்கூட கொழும்பில் உள்ள அமெரிக்க ஜப்பான், இந்தியத் தூதரகங்களை நோக்கிக் கேள்வி எழுப்ப முடியும். அப்படிக் கேள்வி எழுப்பினால். ஈழத்தமிழர்களுக்கு எதிராக அல்ல, மாறாக இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்காக இலங்கைப் படையினரையும் பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அந்த நாடுகள் பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
அதன்மூலம் 2009ஆம் ஆண்டு ஈழப்போர் ஏன் இல்லாதொழிக்கப்பட்டதென்ற உண்மைக் காரணமும் வெளிப்படலாம். சம்பந்தன் நாடாளுமன்ற உரையில் கூறியதுபோல், உங்களுக்குரிய பொறுப்பை ஏன் 10 ஆண்டுகள் சென்ற பின்னரும்கூட செய்ய முடியவில்லை என்றும், அரசியல் தீர்வு வழங்கப்படுமென்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு நீங்கள் கொடுத்த தண்டனை என்னவென்றும் பதிலுக்குத் துணிவோடும், உரிமையோடும் கேட்டிருக்கலாம்.
2002இல் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பித்தபோது அமெரிக்க, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் தலைமையில் கூட்டப்பட்ட இணைத்தலைமை நாடுகள் தற்போது எங்கே என்றும் வினவியிருக்கலாம். ஆனால் அப்படிக் கேட்கத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தயங்குகின்றன. அமெரிக்க இந்திய அரசுகளைக் கேள்வி கேட்க விரும்பாத அணுகுமுறையின் ஊடே இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுக ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது என்பதை இந்தக் கட்சிகள் அறி்ந்தும் தெரியாததுபோன்று செயற்படுகின்றன.