கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது!
கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வில்லிவாக்கத்தை சேர்ந்த கவுசிபி என்ற இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து இவர் மருத்துவமனைக்கு நேற்று ஸ்கேன் எடுக்க சென்ற நிலையில் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய காரானது வருமான வரித்துறை அதிகாரி ஒருவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது கொளத்தூரை சேர்ந்த ரூபாவதி என்று தெரியவந்தது. இவர் வருமான வரித்துறை அதிகாரியின் தோழியாம்.
வழக்கமாக வருமான வரித்துறை அதிகாரி தனது காரை தனது தோழியை வீட்டுக்கு அனுப்பி சாப்பாடு எடுத்து வரச் சொல்வாராம். அப்படி தனது ஓட்டுநர் அரவிந்தை சாப்பாடு எடுத்து வர சொல்லி அனுப்பிய போதுதான் ரூபாவதி தான் கார் ஓட்டுவதாக கூறி காரை ஓட்டியுள்ளார். அப்போது தான் அவர் விபத்து ஏற்படுத்தியதாக தெரிகிறது . ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டிய ரூபாவதியையும், அலட்சியமாக இருந்த ஓட்டுநர் அரவிந்தனையும் போலீசார் கைது செய்தனர். விபத்தில் இறந்த கவுசிபிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.