November 23, 2024

சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்?அரசியல் கைதிகள் மன்றாட்டம்?

தற்போதைய அரசியல் சூழலை சாதகமாக பய்னபடுத்தி அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அக்கறையோடு செயற்பட அனைத்து தரப்புக்களிடமும் தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கின்றார்கள். அதற்கு சாதகமான இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து சிறுபான்மைத் தரப்பினரும் இனம், மதம், கட்சி, அரசியல், பிரதேச வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மனித நேயத்திற்கு மதிப்பளித்து கொள்கையளவில் ஒன்றுபட்டு, எமது விடுதலைக்கு வழி சமையுங்கள் என வினயமுடன் வேண்டுகிறோம்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறையே வாழ்க்கை என சீரழிந்து கொண்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம் உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு நிகழ் காலத்தைக் நகர்த்;துகிறோம். நாட்டில் தேர்தல்கள் வருகின்ற போதும், ஆட்சியதிகாரங்கள் மாறுகின்றபோதும் எங்களது சிறைவாழ்வுக்கு விடிவு பிறக்குமென கண்ட கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போனது. விடுதலையை வலியுறுத்தி நாம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டபோதெல்லாம் திறந்த வாக்குறுதிகளும், தீராத நோய்களுமே எமக்கு மிஞ்சிப் போனது.
இதுவரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு எம்மோடு சிறையிருந்த பத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அது தவிர சிறை வன்முறைகளின்போது நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். தற்போது உயிர்க்கொல்லித் தொற்று நோயான கொவிட் 19 சிறைக் கொத்தணியாக மாறி ஆயிரக்கணக்கான கைதிகளை அச்சுறுத்துவதுடன், சில உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றது.
எமது குடும்ப உறவுகள் உழைக்கும் கைகளை இழந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது பிள்ளைகள் தந்தையரின் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். வயதான பெற்றோர் தமது இறுதிக்காலத்திலாவது ‚என் பிள்ளை கொள்ளியிட உயிரோடு வருவானா?‘ என கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்.  எனவே சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள எமது விடுதலைக்கு வழி சமைக்க அனைவரும் முன்வாருங்கள்.
இன்று சிறைகளில் வாடுகின்ற நாம் சுகபோகமாக வாழத்தெரியாமல் சிக்குப்பட்டுப் போயிருப்பவர்கள் அல்ல. எமது சொந்த சுயநல லாபத்திற்காகச் செயற்பட்டு சிறையேகியவர்களுமல்ல என்பதைத் தயவு செய்து சற்றுப் புரிந்து கொள்ளுங்கள். மூன்றரை கால யுத்தம் முடிவுறுத்தப்பட்டு, 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு தசாப்தமொன்று கடந்துள்ள நிலையிலும்கூட, 20 வருடங்களாகச் சிறையிருக்கும் எமது விடுதலை வாசல் திறக்கப்படவில்லை என்பது பெருந் துக்கமல்லவா?
எனவே சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக நல அமைப்புக்கள் என அனைத்துத் தரப்புக்களும் அரசியல் கைதிகளான எமது விடுதலை விடயத்தில் தத்தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அரசியலமைப்பின் பிரகாரம் சிறைக்கைதிகளின் விடயத்தில் தீரமானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்த வகையில் ‚ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர்‘ பட்டியலுக்குள் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்வாங்குமாறு, அரசியல் அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தனித்தனியான கருணை மனுக்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு முன்வைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதன்மூலம் எமக்கும் சமூகத்துடன் இணைந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எம்மைப் பிரிந்து நித்தமும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் கண்ணீருக்கும் ஒரு முடிவு கிட்டும் என எதிர்பார்க்கிறோம்.