November 23, 2024

மகிந்தவை சந்திக்க தனியாக வரவேண்டாம்: கூட்டமைப்பிற்கு அறிவிப்பு?

‚பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க வரும்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக களவாக வரவேண்டாமென கேட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.

நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (08) கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அரசாங்கத்தின் ஒரு கிலோமீற்றர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிலோமீற்றர் பாதைக்குகூட செப்பனிடப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தினார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச ‚2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தடுத்து நிறுத்தியிருந்தது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதிகளை உள்ளிடக்கியே, ஒரு இலட்சம் கிலோமீற்றர் பாதை அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். எந்தவொரு விதத்திலும், வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை புதிய அரசாங்கம் கைவிடவில்லை.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை, தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும்‘ என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், ‚தவராசா கலையரசன் கூறுவது என்னவென்றால், இவரது பிரதேசத்தில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் காபட் பாதை அபிவிருத்தித் திட்டம் அரசியல் ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது. இவரது பிரதேசத்தில் உள்ள பாதைகளில், 10 -15 கிலோமீற்றர்களையேனும் புனரமைத்துத் தாருங்கள்‘ என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்சஷ, ‚பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க வரும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனையும் அழைத்து வாருங்கள். அப்போது பிரதமர் அதனை செய்துகொடுப்பார். தனியாக வரவேண்டாம். அவரையும் அழைத்து வாருங்கள்‘ என்றார்.