2030இல் 20.70 கோடி பேர் வறுமைக்குள்
கொரோனா வைரஸின் நீண்டகாலப் பாதிப்பால் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர்
வறுமைக்குள் செல்வார்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது.இதன்மூலம், மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுளில் கொரோனா வைரஸின் பன்முகப் பாதிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வது ஆகியவை குறித்து ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சர்வதேச நிதியத்தின் கணக்கின்படி கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு உலகளவில் 4.40 கோடிக்கும் அதிகமான மக்கள் மோசமான வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள் என மதிப்பிட்டிருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின்னர் கூடுதலாக உலகளவில் 20.70 கோடி மக்கள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். அதிலும் பெண்கள் வறுமையில் வாழும் எண்ணிக்கை 10.20 கோடியாக அதிகரிக்கும்.
கொரோனாவினால் உண்டான பொருளாதார பிரச்சினைகளில் 80 வீத உற்பத்திப் பாதிப்பு 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பிருந்த நிலையை எட்டுவதைத் தடுக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை முன்வைத்த முதலீடுகள், சமூக பாதுகாப்புத் திட்டம், நலத் திட்டங்கள், நிர்வாகம், டிஜிற்றல் மயமாக்கல், பசுமைப் பொருளாதாரம் போன்றவற்றாலும் மக்கள் மோசமான வறுமைக்குள் செல்வதைத் தடுக்க முடியாது.
ஆனால், இப்போதுள்ள கொரோனா பாதிப்பை கணக்கில் எடுத்து, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும்போது, 14.6 கோடி மக்களை மோசமான வறுமையிலிருந்து மீட்டு, பாலின வறுமைக்கான இடைவெளியையும் குறைக்க முடியும். பெண்கள் வறுமையில் வீழ்வதை 7.40 கோடியாகக் குறைக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுகுறித்து ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட நிர்வாகி அசிம் ஸ்டெய்னர் கூறுகையில் “வறுமை குறித்த இந்த புதிய ஆராய்ச்சியின் மூலம் உலகத் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகை மாறுபட்ட திசைகளில் கொண்டுசெல்ல முடியும்.
அடுத்த 10 ஆண்டுகளில் முதலீடுசெய்ய நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு கொரோனாவிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவுவது மட்டுமல்லாது வளர்ச்சிக்கான பாதையை மறுசீரமைக்கும். இந்த பூமி பசுமையான எதிர்காலத்தை நோக்கி நியாயமாகச் செல்ல வழிகாட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்