சந்தேஷய வானொலியை நிறுத்தவேண்டாம்?
‘சந்தேஷய வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சியை’ 2020 டிசம்பர் 1ஆம் திகதியில் இருந்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியான ஊடக அணுகல் ஒன்றுக்காக முன்னிற்கும் பிபிசி போன்ற ஊடக நிறுவனத்தால் மேற்கொள்ளப்படக் கூடாத செயற்பாடொன்றாகும் எனத் தெரிவித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம், அது தொடர்பாக அதன் பலத்த கவலையையும் வெளியிட்டுள்ளது.
30 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்த சந்தேஷய வானொலி நிகழ்ச்சியை, கடந்த சில வருடங்களாக 5 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த பிபிசி நடவடிக்கை எடுத்திருந்ததோடு, நிகழ்ச்சி சிரச எப்எம் வானொலி ஊடாக வார நாட்கள் ஐந்திலும் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
பிபிசி சிங்கள சேவையை ஒன்லைன் ஊடகமாக நடத்திச் செல்ல பிபிசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றுக்கு அமைய, இலங்கையில் டிஜிட்டல் கல்வியறிவு 40 வீதமேயாகும். கிராம மற்றும் தோட்டப் பிரதேசங்களில் அது மேலும் குறைவானதாகும். ஒன்லைன் ஊடகங்கள் நகர்ப் புறங்களில் பிரபல்யம் பெற்றுள்ளன.
கிராம மக்கள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களிடையே தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களே பிரபல்யம் பெற்றுள்ளன. அவ்வாறானதொரு சூழ்நிலையில், தகவல்களை அறிந்துகொள்ளவும், கருத்துத் தெரிவிக்கவும் இருந்த ஒரு சிறிய ஊடக நிறுவனம் மூடப்படுவதும் பயங்கரமான பிரச்சினையாகும்.
அத்தோடு, இலங்கையில் ஊடகச் சுதந்திரம் குறித்த பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதோடு, மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளும் தீவிரமடைந்து வரும் சந்தர்ப்பமொன்றில், ஐந்து நிமிட ஊடக அணுகலையேனும் மக்கள் இழப்பது பொருத்தமானதல்ல. ஜனநாயக ரீதியான மற்றும் மனித உரிமைகள் தூரநோக்குடன் அணுகக்கூடிய சந்தேஷய வானொலி நிகழ்ச்சியை நடத்திச் செல்வதற்கு பிபிசி நிறுவனம் கரிசனைகொள்ள வேண்டும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் எதிர்பார்க்கின்றது.