November 21, 2024

சீமானால் தாக்கம் இல்லையாம்! ரஜினியின் வாக்கைப் பிரிக்கும் யுக்தி!

தனிக்கட்சி வரும் ஜனவரியில் துவக்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது வழக்கமான பாணியில் அறிவித்துள்ளார் நேர்மையின் சிகரமாக அவருக்கு வேண்டியவர்களால் அடையாளப்படுத்தப்படும் நடிகர் ரஜினிகாந்த்.வாக்குப் பிரிப்பு உத்தி குறித்து சில அரசியல் பார்வையாளர்களின் கருத்துகள்:

தனிக்கட்சி இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக(வினோத பதவி) அரசியலில் கேலிக்கூத்தின் அடையாளமாக இருக்கும் தமிழருவி மணியனையும் அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தமிழகத்தில் வாக்குகளைப் பிரிப்பதற்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கி விடப்பட்டவர், தனது ஜாதி உணர்வை, தனது பல படங்களில் வெளிப்படுத்தி, அதேசமயம், தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் கமலஹாசன். இந்தத் தேர்தலிலும் முஸ்தீபுடன் வேலைகளைத் துவக்கியுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளையும் கமலஹாசன் பிரித்தார் என்ற செய்திகளும் உண்டு!

இந்த வாக்குப் பிரிப்பு விஷயத்தில் கமலுக்கு முன்னதாகவே களத்தில் இருப்பவர் சீமான். விடுதலைப் புலிகள், திராவிட எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் ஒரு வியூகக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார் சீமான். அதனால்தான், அவரின் சில பேச்சுகளுக்கு, கடுமையான வழக்குகளை சந்தித்து உள்ளே இருந்திருக்க வேண்டியவர், இன்னும் வலுவாக உலா வருகிறார். அவரிடமிருந்து பிரிந்த கல்யாண சுந்தரம் போன்றவர்களால் தனியான அமைப்பை இன்னும் ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால், இந்த 2 வாக்குப் பிரிப்பு சக்திகள் போதாது என்ற நிலையில், நீண்ட வற்புறுத்தல்கள் மற்றும் சிலவகை மிரட்டல்களின் முடிவில், தனிக் கட்சி அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியின் தனிக்கட்சி தொடர்பாக ‍வேறுசில கருத்துக்களும் நிலவுகின்றன. அதாவது, ரஜினிகாந்த் கட்சித் தொடங்கி, அதிமுக – பாஜக அணியுடன் கூட்டணி வைத்தால், மாற்று வாக்குகள் அந்த அணிக்கு நிச்சயம் செல்லாது. அதேசமயம், அவர் தனி அணியாக நின்றாலும், அதிமுக – பாஜக அணிக்கு செல்ல வேண்டிய கணிசமான வாக்குகள் ரஜினிக்கு சென்றுவிடும் என்பதே அந்தக் கருத்துக்கள்.

இந்நிலையில், ரஜினியுடன், மு.க.அழகிரி போன்றவர்களும் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியை இப்படி அறிவிக்க வைத்திருப்பதன் மூலம், மற்றொரு கணக்கும் பேசப்படுகிறது. திமுக தற்போதைய நிலையில், மிக அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, சட்டமன்ற தேர்தலில், தனித்தே, குறைந்தபட்சம் 150 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டுமென்று திட்டமிட்டு வருகிறது. தற்போது ரஜினியை களமிறக்கி விட்டிருப்பதன் மூலம், தாங்கள் கேட்குமளவு தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், திமுகவின் சில கூட்டணி கட்சிகள், ரஜினியைக் காட்டி திமுகவை மிரட்டி, அதிக தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு, அதன்மூலம் திமுக, குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிடும் நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென்பதும் ஒரு திட்டமாக விளக்கப்படுகிறது.

இதில், மற்றொரு காமெடி என்னவென்றால், இன்னும் தொடங்கப்படாத கட்சிக்கு, மேற்பார்வையாளர் என்ற வினோதமான பதவிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழருவி மணியன், இன்னும் சில நாட்களில், “ரஜினியின் கட்சி ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல் செயல்படுகிறது. எனவே, மனஉளைச்சல் பொறுக்கமாட்டாமல் வெளியேறுகிறேன்” என்ற அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில், மணியனின் வரலாறு அப்படியானது என்கின்றனர்.

சிலவகை அரசியல் பார்வையாளர்களின் கருத்துகள் இப்படியாக இருக்க, வெளிப்படையான வலதுசாரி & திராவிட எதிர்ப்பு அரசியல் பார்வையாளர்கள் பலரும், தான் எப்போதும் தரவுகளை வைத்து உண்மையைத்தான் பேசுவேன் என்று கூறிக்கொண்டு, வாங்கிய காசுக்கு கூவும் சில அரசியல் பார்வையாளர்களும், ரஜினியின் வருகை, கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில், ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறிவருகின்றனர்.

அரசியல் பார்வையாளர்களின் இந்தக் கருத்துகள் எல்லாம் இருக்கட்டும்! ரஜினி இன்னும் தனது கட்சியை அறிவிக்கவில்லை. உண்மையில், சொன்னபடியே, ஜனவரியில் அறிவித்துவிடுவாரா? என்பதற்கு பெரிய உத்தரவாதமெல்லாம் கிடையாது.

தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு, கொரோனா மற்றும் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி, வெளியில் பிரச்சாரங்களுக்கும் அதிகம் செல்லாத நிலையில், இவரின் கட்சி எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. இவரின் கட்சி, எந்த அணியில் இணையும் என்பதும் தெரியாது. பிரச்சார பீரங்கிகளாக நியமிக்கப்படும் நபர்கள், தாக்கம் செலுத்துவார்களா? என்பதும் தெரியாது.

திட்ட கமிஷன் உறுப்பினர் என்பதைத் தவிர, வேறு உருப்படியான எந்த குறிப்பிடத்தக்க பதவியையும் வகித்திராத தமிழருவி மணியன் வேண்டுமானால் ஏதேனும் கனவில் மிதக்கலாம்!

ஆனால், ரஜினியின் உறுதியான தனிக்கட்சி தொடக்கம், தொடக்கத்திற்குப் பிறகான விளைவுகள் என்பவை, யூகங்களாகவே நீண்டகாலம் நிலைக்கத்தக்கவை!