November 22, 2024

மீண்டும் ஆமியில் கூலி வேலைக்கு தமிழ் இளைஞர்கள்?

இலங்கை இராணுவத்திற்கு கூலி வேலைக்கு தமிழ் இளைஞர் -யுவதிகளை இணைக்கும் பணியை படைத்தலைமை ஆரம்பித்துள்ளது.

அவ்வகையில்;  யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்துகொண்டனர்..

குறித்த நிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒரு சிலரே தற்போது இராணுவத்தில் இணைந்து கடமை ஆற்றி வருகின்றார்கள். ஆனால் ராணுவத்தில் இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் யாரும் இணைந்து கடமை ஆற்ற முடியும்.

கிராம அலுவலர்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் சென்று குறித்த ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் .

நான் ராணுவத்தில் இணைந்த போது எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு கப்டன் தர  தமிழ் அதிகாரி மகேந்திரன் எனப்படும் ஒருவர் எனவே இதனை எல்லாம் நீங்கள் உதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டிலும் இதே பாணியில் கூலி வேலைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையொன்றை படைத்தரப்பு முன்னெடுத்த போதும் அது படுதோல்வியில் முடிவிற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.