November 21, 2024

உயிர்க்கொடை நினைவேந்தலும்! தேநீர்க்கடை பேச்சுவார்த்தையும்! பனங்காட்டான்


மாவீரர் நினைவு வணக்கத்துக்கு சிங்கள நீதிபரிபாலனத்திடம் அனுமதி கோரும் வழக்கம் இனிமேல் வேண்டாம். மாவீரர் மண்ணில் தீபம் ஏற்றவும் அவர்களை வணங்கித் துதிக்கவும் எவருடைய அனுமதியும் தேவையில்லையென்பதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு இல்லத்தின் முன்னாலும் நவம்பர் 27ல் தீபமேற்றப் பழக வேண்டும். அந்தத் தீபத்தின் ஒளியில் மாவீரர் முகங்கள் பிரகாசிப்பது தெரியும். இதுவே, மாவீரர் பெயரில் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் கற்றுக் கொடுக்கும் பாடமாக அமையும்
.நவம்பர் தமிழர்களின் புனித மாதம், வணக்கத்துக்குரிய மாதம், தீபமேந்தித் துதிக்கும் மாதம். இதற்குக் காரணமானவர்கள் எங்கள் உயிர்க்கொடையாளர்கள்.

மாபெரும் தியாகத்துக்கு மக்கள் மதிப்பளிப்பதற்கு சிங்கள தேசம் விதிக்கும் தடை அந்த மக்களை எழுச்சி கொள்ள வைக்கிறது, திரண்டு எழ வைக்கிறது, தடைகளை உடைத்தெறியத் தூண்டுகிறது. உணர்வுபூர்வமாக மட்டுமன்றி அறிவுபூர்வமாகவும் அவர்களை சிந்தித்து செயற்பட வைக்கிறது.

எங்கள் மண்ணில் எங்கள் பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்த சிங்கள நியாயாதிக்குட்பட்ட நீதிமன்றங்களிடம் எதற்காக அனுமதி பெற வேண்டுமென்ற சிந்தனை இப்போது மக்களிடம் எழுந்துள்ளது.

எதனையும் எப்போதும் அரசியலாக்கும் பதவி மோகர்கள் மாவீரர் நினைவேந்தலையும் தங்கள் வாக்கு வேட்டைக்கு உட்படுத்துவதே சிங்கள அரச நீதிமன்றங்களிடம் அனுமதி கேட்க முனையும் செயற்பாடு.

தியாகி திலீபன் நினைவேந்தலின்போது அந்த நீதிமன்றங்கள் சரியான நீதி வழங்கவில்லையென்பதைத் தெரிந்து கொண்டும் மாவீரர் நினைவேந்தலுக்கு அதே படி ஏறியது எதங்காக? சிங்கள அரசின் காவற்படை நீதிமன்ற தடையைப் பெறுவதற்கு முன்னர் அதனைத் தடுத்துவிட முடியுமென்று மேற்கொள்ளப்பட்ட முனைப்புகளுக்கு நீதியான நீதி கிடைத்ததா?

சிங்கள தேசத்துக்கு இறைமை உண்டென்றால் தமிழர் தேசத்துக்கும் அது உண்டு என்பதை எவரிடமும் அனுமதி பெறாது நினைவேந்தலை நிகழ்த்தி காட்டியிருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றப் படியேறி இடறிவிழ வேண்டியதில்லை.

வடமராட்சியில் மாவீரர் பண்டிதரின் இல்லத்தில் அவரது தாயார் வழமைபோல மேற்கொண்ட நினைவுச்சுடர் வணக்க நிகழ்வு இவ்வருடம் மாவீரர் வாரத்தின் முதல் நிகழ்வாக இடம்பெற்றது. ஒரு தாய் தமது மகனுக்கு வீரவணக்கம் செலுத்துவதை எந்தச் சட்டமும் தடுக்க முடியாதென்பதை சிங்கள எதேச்சாதிகார அரசுக்கு இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாவீரர் பண்டிதரின் தாயார் மேற்கொண்ட புனித  நிகழ்வை அரசியலாக்கி ஆதாயம் தேட எத்தனித்தது வெட்கக்கேடு. தமது கையாட்களையும் கூட்டிக்கொண்டு அந்த மாவீரரின் வீட்டுக்குச் சென்று வணக்கம் செலுத்திய சுமந்திரன் தூய்மையான எண்ணத்தோடு அதனை மேற்கொண்டிருந்தால் அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும்.

அப்படியாக நடைபெறவில்லை. மாறாக, மாவீரர் பண்டிதரின் முன்னால் வணக்கம் செலுத்துவதை ஒளிப்படம் எடுத்து தமது முகநூலில் பதிவேற்றியதுடன் ஊடகங்களிலும் வெளிவரச் செய்தது எதனைக் காட்டுகிறது?

விடுதலைப் புலிகளின் (ஆயுத) போராட்ட வழிமுறையை தாம் ஏற்கவில்லையென்றும், இனிமேலும் அதனை ஏற்கப்போவதில்லையென்றும் பகிரங்கமாகக் கூறியதோடு நிற்காது, அதனையே மீண்டும் மீண்டும் கூறி வந்த சுமந்திரன் திடீரென மாவீரர் பண்டிதர் இல்லம் சென்று வணக்கம் செலுத்துமளவுக்கு மனம் மாறியுள்ளாரா? அல்லது கடந்த பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட காயத்துக்கான மருத்துவமா?

இதுவரை எந்தவொரு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விலும் பங்குபற்றாத இவர், இதுவரை எந்தவொரு மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல்களிலும் கலந்து கொள்ளாத இவர், திரிகரண சுத்தியுடன் மாவீரர் பண்டிதருக்கு வணக்கம் செலுத்தியிருந்தால் தமது உளத்தூய்மையையும் நேர்மையையும் நிரூபிப்பதற்கு நவம்பர் 27ம் திகதி காத்திருக்கிறது.

அந்த நாளே இவரது செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான நேர்மைத்துவத்தை பொதுவெளியில் எடுத்துக்காட்டும்.

கொடுங்கோலாட்சியில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி கிடைக்காததை இவ்வருடம் வெவ்வேறு அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலமாக்கி வருகின்றனர். நினைவேந்தலை தடுத்து நிறுத்துவது சர்வாதிகாரத்தின் உச்ச நிலையைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

தங்கள் உறவுகளை மக்கள் நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று தெரிவித்துள்ளார் ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திசநாயக்க. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் தம் பங்குக்கு கருத்து வெளியிட்டுள்ளார். மக்களின் நினைவேந்தல் உரிமையை தட்டிப்பறிக்கக்கூடாது (இதற்கு என்ன அர்த்தம்) என்பது இவரது கூற்று.

தெற்கில் ஜே.வி.பி.யினர் வருடாவருடம் இரண்டு தடவை தங்கள் போராளிகளுக்கு நினைவு வணக்கம் நடத்த அனுமதிக்கலாமென்றால், வடக்கு கிழக்கில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் அந்த உரிமையை மறுப்பதை ஏற்க முடியாது என்று கருத்துரைத்துள்ளார் தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதன் துணைத்தலைவரும் ரணிலின் தாய்மாமன் மகனுமான றுவான் விஜேவர்த்தன ஆகியோரிடமிருந்து இது தொடர்பான கருத்து எதுவும் இதுவரை வரவில்லை. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அதே நிலைதான்.

தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா திடீரென சில தினங்களுக்கு முன்னர் குண்டொன்றை வீசினார். மாவீரர் நினைவேந்தலை நடத்துவது தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அந்த அறிவிப்பு வந்தது. அப்படியானதொரு பேச்சுவார்த்தை நடைபெறாது என்பது அவருக்கு மட்டுமன்றி எல்லோருக்குமே தெரியும்.

ஆனால், சுமந்திரனுக்கு மட்டும் அந்த அறிவிப்பு என்னவோ செய்துவிட்டது. மாவையருக்கு முன்னராக மகிந்தவுடன் தாம் பேச்சு நடத்த வேண்டுமென அவர் எண்ணி அதற்கான இடத்தையும் சுலபமாக தெரிவு செய்தார். இதற்கு மகிந்தவிடம் அனுமதி பெறவேண்டியேற்படவில்லை. இது ஒரு புதுமையான சந்திப்பு. தந்திரமானதும்கூட.

நவம்பர் 19ம் திகதி, வியாழக்கிழமை மகிந்தவின் எழுபத்தைந்தாவது பிறந்தநாளுக்கு மறுநாள் புதிய வரவு செலவுத் திட்ட விவாத நாள். நிதியமைச்சர் என்ற வகையில் மகிந்த அன்று நாடாளுமன்ற அவையில் இருப்பார். ஜனாதிபதி கோதபாயவும் அன்று அவைக்கு சமுகமளித்திருந்தார்.

முற்பகல் அமர்வுக்குப் பின்னரான இடைவேளை. நாடாளுமன்ற உணவுச்சாலையில் உணவுடன் கோப்பி, தேநீர், குளிர்பானம் அருந்தும் நேரம். உணவுச்சாலை வாசலுக்கு அருகாமையிலுள்ள ஒரு மேசையைத் தெரிந்து அதில் சுமந்திரன் தமது சகாக்களுடன் அமர்ந்தார். எவரும் உள்ளே செல்வது வெளியேறுவது இவ்வழியாகவே. மகிந்தவும் கோதாவும் இந்த மேசையைத் தாண்டாது செல்ல முடியாது.

எதிர்பார்த்தவாறு சந்திப்புக்குரிய நேரம் வந்தது. மகிந்த உணவுச்சாலையிலிருந்து வெளியேறும்போது அவருக்கு வணக்கம் கூறிய சுமந்திரன் அதனோடு பிறந்தநாள் வாழ்த்தும் கூற, மீண்டும் நாங்கள் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டுமென்று மகிந்த தெரிவித்தார்.

‚நாங்கள் தயார். எப்போது என்பதை தெரிவியுங்கள்“ என்று பதிலளித்தார் சுமந்திரன். (சில வாரங்களுக்கு முன்னர் மகிந்தவை அவரது இல்லம் தேடிச்சென்று சுமந்திரன் தனியாகச் சந்தித்தது நினைவிருக்கலாம்).

இன்னொரு மேசையில் சில அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கோதபாய வெளியே செல்வதற்கு வந்தபோது மகிந்தவும் சுமந்திரனும் நின்ற மேசையருகே இணைய நேர்ந்தது. ‚பேச்சுக்களை நாங்கள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென பிரதமர் சொல்கிறார்“ என்று சுமந்திரன் கோதபாயவிடம் கூறினார். மகிந்த வேறுவிதமாகச் சொல்லிவிட்டால் கதை வேறாகிவிடுமென்பதால் சுமந்திரன் முந்திக் கொண்டார்.

கோதபாய ஒன்றும் தெரியாத ஏமாளியல்ல. ‚தேர்தலுக்கு முன்னரே சுமந்திரனுடன் பல தடவை நான் பேச்சு நடத்தியுள்ளேன்“ என்று மெதுவாக விடயத்தைக் கக்கினார் கோதபாய. சமாளித்துக் கொண்ட மகிந்த, ‚அது தேர்தலுக்கு முன்னர். இப்போது புதிய சூழல். புதிதாக பேச்சைத் தொடங்குவோம்“ என்றார். கோதபாய இலகுவாக பந்தை மகிந்த பக்கம் வீசி, நேரத்தையும் காலத்தையும் தீர்மானியுங்கள் என்று கூறிவிட்டு அகன்றுவிட்டார்.

தேர்தலுக்கு முன்னர் சுமந்திரன் பல தடவை தன்னைச் சந்தித்ததை சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகிய கூட்டமைப்பின் மூன்று எம்.பிக்கள் முன்னிலையில் எதற்காக கோதபாய கூறினார். சுமந்திரன் தன்னை முன்னர் சந்தித்ததை அம்பலப்படுத்தும் நோக்கமா? அல்லது சுமந்திரன் எப்போதும் தங்களுடன் பேச்சுகளை நடத்த விரும்புபவர் என்பதை எடுத்துக்காட்டவா?

என்னவோ! மாவையருக்கு மகிந்தவுடனும் கோதவுடனும் சுமந்திரன் பேச்சை ஆரம்பித்துவிட்டார் என்ற படம் ஊடகங்களில் காட்டியாயிற்று. மாவீரர்கள் மாதத்தில் நடத்தப்பட்ட முக்கியமான ஒரு அரசியல் போட்டி நாடகம் இது.

இதனை எழுதும்போது, சில வருடங்களுக்கு முன்னர் இதே நாடாளுமன்ற உணவுச்சாலையில் சம்பந்தன் உட்பட பல கூட்டமைப்பு எம்.பிக்களுடன் மகிந்த நடத்திய சந்திப்பொன்று நினைவுக்கு வருகிறது.

கூட்டமைப்பினருடன் தோளில் கைபோட்டவாறு ஊடகங்களுக்கு காட்சி கொடுத்த மகிந்த, அதில் கலந்து கொண்ட சரவணபவனைப் (அப்போதைய எம்.பி) பார்த்து, ‚உங்கள் மீது உங்கள் மகள் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்“ என்று கூறினார். யாழ்ப்பாணத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு உங்கள் மகள் பல தடவை உங்களிடம் கேட்டும் நீங்கள் கூட்டிச் செல்லவில்லையென்று உங்கள் மகள் என்னுடன் உரையாடும்போது கூறினாரென்பதுவே மகிந்த இங்கு தெரிவித்தது.

இதனை தனிமையில் சரவணபவனிடம் கூறாது, அவரின் கட்சிக்காரரின் மத்தியில் வைத்து மகிந்த கூறியதன் நோக்கம் என்ன? சரவணபவன் குடும்பத்தினருக்கு தன்னுடன் நெருங்கிய தொடர்புண்டு என்பதை அவரது கூட்டாளிகள் மத்தியில் போட்டுடைப்பதே அதன் நோக்கம்.

அதேபாணியில்தான் கோதபாயவும் சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் தன்னுடன் பல தடவை பேச்சு நடத்தினார் என்று அவரது கூட்டாளிகள் முன்னிலையில் அவரை அம்பலப்படுத்தும் நோக்கத்தில்தான் கூறினாரென்று கொள்ளலாமா?

அதுதான் அவர்கள் என்றால், இதுதான் இவர்கள். அவர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்ளட்டும்.

மாவீரர் நாளன்று தாயகத்தில் ஒவ்வொரு இல்லத்தின் முன்னாலும் வணக்க தீபம் ஒளி பரப்பட்டும். அந்த ஒளியில் மாவீரர்கள் வதனம் பிரகாசிக்கட்டும். அவர்களுக்கும் இவர்களுக்கும் மக்கள் புகட்டும் பாடமாக இது அமையட்டும்.