November 24, 2024

முல்லைத்தீவிலிருந்து தீவிரமாக வேகம் எடுக்கும் நிவர் புயல்?

தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக நிலைகொண்டுள்ள நிவர் புயலானது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இது இன்றிரவு 12.20 அளவில் முல்லைத்தீவு க்கு அருகாக நகரும். இதன்போது புயலின் மையத்தின் வெளிப்பகுதி முல்லைத்தீவிலிருந்து சரியாக 129 கி.மீ. தொலைவிலும், புயலின் மையம் 171 கி.மீ. தொலைவிலும் காணப்படும்.
நாளை( 25.11.2020) அதிகாலை 2.00 மணிக்கு புயலின் மையம் சாளையில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும், நாளை அதிகாலை 4.00 மணியளவில் 138 கி.மீ. தொலைவிலும் காணப்படும். நாளை (25.11.2020) காலை 10.00 மணியளவில் புயலின் நடுமையம் பருத்தித்துறையிலிருந்து 118 கி.மீ. தூரத்திலும், புயலின் மையத்தின் வெளிப்பகுதி 72 கி.மீ. தூரத்திலும் காணப்படும்.
நாளை முற்பகல் 11.00 மணியளவில் புயலின் மையத்தின் வெளிப்பகுதி பருத்தித்துறையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் காணப்படும்.
அதன் பின்னர் வடக்கு நோக்கி நகரும் நிவர் புயலானது நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுதினம் அதிகாலை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் கரையைக் கடப்பதற்கான வாய்ப்புண்டு. இந்தக் கணிப்பு புயலின் தற்போதைய நகர்வு வேகத்தின் அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது. புயலின் நகர்வு வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் மேலுள்ள கணிப்பிலும் மாற்றங்கள் நிகழலாம்.
மழையைப் பொறுத்தவரை 26.11.2020 மாலை வரை இருக்கும். அதன்பின் படிப்படியாக குறைந்து விடும்.
காற்றின் வேகம் இன்றிரவிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்.
முல்லைத்தீவு மக்கள் குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் இப்பொழுதிருந்து நாளை பிற்பகல் வரை மிக அவதானமாக இருக்கவும்.
வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேசன்துறை பகுதி மக்கள் இபொழுதிருந்து நாளை மறுதினம் காலை வரை அவதாரமாக இருக்கவும்.
வடக்கு மாகாணத்தின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அலைகளின் உயரம் 6-9 அடிவரை உயரும் என்பதனால் சில சமயம் சில பகுதிகளில் கடல்நீர் தரைப்பகுதிக்குள் வரவும் வாய்ப்புண்டு.
இந்த நிவர் புயலால் வட மாகாணத்திற்கு நேரடியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் மேற்கூறிய விடயங்களில் அவதானமாக இருந்தால் எமக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது.
இந்த நிவர் புயல் தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.