November 21, 2024

எதியோப்பிய நெருக்கடி! போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா கவலை!

எதியோப்பியாவின் வடக்கு டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரில் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எத்தியோப்பிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கவலையை வெளியிட்டுள்ளதுஎத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கும் டைக்ரே படைகளுக்கும் இடையே சண்டை கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மோதல்கள் ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டி கிழக்கு ஆபிரிக்காவை சீர்குலைக்கும் என்று உதவி குழுக்கள் அஞ்சுகின்றன.

சுமார் 500,000 மக்கள் வசிக்கும் டைக்ரேயின் தலைநகரான மெக்கெல்லில் முன்னேறப்போவதாக எத்தியோப்பிய இராணுவம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது டைக்ரேயின் படைகளுக்கு 72 மணி நேர இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார். அவர்களைச் சரணடையுமாறு கூறியுள்ளார்.

ஆனால் டைக்ரேயின் படைகள் தொடர்ந்து போராடவுள்ளதாக சபதம் செய்துள்ளன. டைக்ரே படையின் தலைவர் டெபிரெஷன் ஜெப்ரெமிகேல் கூறுகையில்:-

எங்கள் பிராந்தியத்தை நிர்வகிப்பதற்கான எங்கள் உரிமையைப் பாதுகாக்க அவர்கள் இறக்கத் தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், எத்தியோப்பியாவின் அரசால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் ஒரு படுகொலைக்கு பின்னால் டைக்ரே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் குழு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. அதில் 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

உள்ளூர் படைகளின் கூட்டணியுடன் மை-கத்ரா நகரத்தில் உள்ள டைக்ரேயன் அல்லாத குடியிருப்பாளர்களை இந்த குழு குத்தியும் அடித்து கொலை செய்தது என்று அந்த மனித உரிமை ஆணையம் கூறியிருக்கிறது.

மனித உரிமைகள் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் முதலில் மை-கத்ராவில் ஒரு படுகொலை பற்றிய அறிக்கைகளை முன்னிலைப்படுத்தியது. ஆனால் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அதனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

டைக்ரேயைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியல் கட்சியான டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF), இதனை மறுத்ததுள்ளது. மேலும் கொலைகள் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.

எத்தியோப்பியாவின் மத்திய அரசு சட்டவிரோத தேர்தலை நடத்தியதாகவும் டைக்ரே பிரிவினர் குற்றம் சாட்டியது. இதேநேரம் ஆயுதங்களைத் திருட இராணுவத் தளத்தைத் தாக்கியதாகவும் எத்தியோப்பியாவின் மத்திய அரசு குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து மோதல்கள் உருவாகின.

இதற்கு பதிலளித்த திரு அபி – முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்? டைக்ரேயில் படைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். அவர்கள் தேசத்துரோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினர்.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி மத்திய அரசை சட்டவிரோதமானது என்று கருதுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தேசிய தேர்தல்களை ஒத்திவைத்த பின்னர் நாட்டை வழிநடத்த ஆபிக்கு ஆணை இல்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.