November 23, 2024

மாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்! பனங்காட்டான்


“எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்“ – தேசியத் தலைவர் (2008)
இந்த மாதம் 27ம் திகதி மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர்க்கொடை தந்த புனிதர்களுக்கு மக்கள் ஒன்றுகூடி வணக்கம் செய்யும் மாவீரர் நாள்.

இது முப்பத்தியிரண்டாவது ஆண்டு மாவீரர் நாள். 1989 கார்த்திகை 27ம் நாள், தமிழீழத்தின் வன்னிப்பரப்பிலுள்ள அடர்ந்த காடொன்றுக்குள் முதலாவது மாவீரர் நாள் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்திய ஆக்கிரமிப்புப் படை தாயக பூமியை கையகப்படுத்தி அட்டூழியங்களை மேற்கொண்டிருந்த அவ்வேளை, மாதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரத்துடனும் தீரத்துடனும் பிரகடனம் செய்து முதலாவது மாவீரர் நாள் உரை நிகழ்த்திய வரலாறு உலக சரித்திரத்தில் முதன்மையானது.

முள்ளிவாய்க்காலில் போராட்டம் மௌனிக்கப்படுவதற்கு முன்னைய ஆண்டான 2008வரை மாவீரர் நாள் உரையை மாதலைவர் நிகழ்த்துவார். அந்த உரைக்காக உலகம் விழித்துக் காத்திருக்கும்.

நவீன உலகின் இருப்பும் உயர்வும் பலத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்றுக்கிணங்க, ஈழத்தமிழினம் ஒரு தலைமையில், ஒரு குடையின்கீழ் பலமாக நின்று தங்கள் விடுதலை இயக்கத்தை நடத்தியது. இதனால் தமிழரின் உரிமைக்குரல் ஓர்மத்துடன் பிசிறின்றி ஓங்கி ஒலித்தது. எல்லா இசங்களையும் ஒன்றாக்கி ஜனநாயக விரோதச் செயல் புரிந்தவர்களை இந்தப் போராட்டம் இனங்கண்டு ஓரங்கட்டியது.

தாயகம் தேசியம் தன்னாட்சி என்பதுவே ஈழத்தமிழரின் பேச்சாகவும் மூச்சாகவும் எழுந்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மிரளச் செய்தது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் புறப்பட்ட தமிழ் மக்கள்இ விடுதலைப் போராட்டத்தின் அரணாகவும் பக்கபலமாகவும் இயங்கினர். இது சிங்கள ஆட்சிபீடத்தை நிலைகுலையச் செய்தது.

தமிழீழம் என்பது 20369 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு என்று தமிழர் கூறியபோது சிங்களம் சினம் கொண்டது. தமிழீழ மாவட்டங்களை துண்டாடுதல், தமிழர்வாழ் நிலப்பரப்பை அபகரித்தல், சிங்கள குடியேற்றங்களை துரிதமாக்குதல், சிங்கள நிர்வாக அலகுகளை தமிழர் வாழ்புலங்களில் உருவாக்குதல், தமிழர் தலைப்பட்டணங்களைச் சிதை;தல், தமிழீழ மாவட்ட எல்லைகளை மாற்றியமைத்தல், தமிழரின் எல்லைக் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்தல், தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயராக்குதல், சிங்கள அரச படைகளுக்கு தமிழீழக் காணிகளை வழங்குதல் என்று பல வழிகளால் தமிழர் தாயகத்தை அழித்தொழிக்க சிங்கள பௌத்த அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் தமிழீழத் தாயகம் என்ற குரல் வீரியம் பெறத்தொடங்கியது.

அரச ஏவல் படைகளின் ஆயுதங்களை ஆயுதங்களால் மட்டுமே சந்திக்க முடியுமென்ற நிலையை சிங்கள ஆட்சித் தலைமைகள் உருவாக்கின. பல்கலைக்கழக தரப்படுத்தலால் பாதிப்புற்ற தமிழ் இளையோர், பள்ளிப் பைகளை வீசி விட்டு ஆயுதப் பைகளை ஏந்தத் தள்ளப்பட்டனர்.

மாவீரர் என்ற வரலாறு இங்கிருந்து – இப்படித்தான் ஆரம்பமானது. 1207 போராளிகள் வீரச்சாவு கண்டிருந்த காலத்தில், 1989 முதலாவது மாவீரர் நாளின்போது தேசியத் தலைவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறியிருந்தார்:

‚இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யாரென்று கேட்கும் நிலையிருந்தது. இன்று எம்மினத்தின் வீரர்களை நினைவுகூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம்தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான நிகழ்வாகக் கருதி ஒவ்வொரு வருடமும் கொண்டாட உள்ளோம்“ என்று அன்று பிரகடனம் செய்திருந்தார்.

32 ஆண்டுகளின் பின்னர், முக்கியமாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் 12வது ஆண்டில் இக்கூற்றை மீள்நினைவுக்குட்படுத்துவதற்கு முக்கிய காரணமுண்டு.

புனிதர்களுக்கான இந்த மாவீரர் நாளை தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் சொந்த அரசியலுக்காகவும் ஊடக புதினத்துக்காகவும் பயன்படுத்துவது மேலோங்கி வருகிறது. கடந்த மாதம் தியாகி திலீபன் நினைவு தினத்துக்காக ஒன்றிணைந்து காட்சியளித்த தமிழ் அரசியல் சீலர்கள், மாவீரர் தினத்தையொட்டி தனித்தனியாக மண்வெட்டி, அலவாங்கு, துடைப்பங்களுடன் காட்சி கொடுக்கின்றனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் எம்.பி. ஒருவர் தமது தொகுதிக்குள் துப்பரவுப் பணி மேற்கொள்கிறார். யாழ்ப்பாணத்தில் இன்னொரு எம்;;.பி. தமக்குரிய பிரதேசமென அதேபாணியில் துப்பரவு செய்கிறார். முல்லைத்தீவிலும் இதே பாணியில் துப்பரவு. அடுத்த சில நாட்களுக்கு இது தொடரக்கூடும்.

நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி. மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கக்கூடாதென்று உரையாற்றியுள்ளார். மாவீரர்களான விடுதலைப் போராளிகள் தங்கள் போராட்டத்துக்கு தெரிவு செய்த வழிமுறையை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லையென்று பகிரங்கமாகக் கூறியவரே இவர்.

கடந்த பொதுத்தேர்தலில் அதற்குரிய பரிசாக தமக்குக் கிடைத்த குறைந்த வாக்கு வெற்றிக்கு பிரயாச்சித்தமாக இவ்வாறு பேசியிருக்கலாம். மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாகப் பேசி நினைவேந்தலுக்கு அனுமதி பெறப்போவதாக தமிழரசுக் கட்சி தலைவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சில சட்டத்தரணிகள் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த நீதிமன்றத்தை நாடியுள்ளனர். காவற்துறையினர் தடையுத்தரவு பெறுவதற்கு முன்னர் இதனைச் செய்ய வேண்டுமென்ற முன்னெடுப்பு இதுவென்று காரணம் கூறப்பட்டது. அதற்கு வவுனியா மன்னார் மாவட்டங்களில் காவற்துறையினர் நீதிமன்ற தடையை பெற்றுவிட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்திலும் தடைகோரி காவற்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இங்கும் தடை கிடைக்குமானால் எங்கள் அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் என்ன செய்யப் போகிறார்கள்?

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகக்கவசமணிந்து, சமூக இடைவெளி பேணி நினைவேந்தலை ஒழுங்கமைக்க சட்டத்தில் இடமுண்டு. சிலவேளை ராணுவத் தளபதி இதனைத் தடுப்பதற்கு படையினரை ஏவலாம். அப்படியானால் அதனை மீறும் சக்தியும் வலுவும் எம்மவர்களிடம் உள்ளதா? செய்நேர்த்தியுடன் துணிந்தால் நிச்சயமாக முடியும்.

ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிட்டவர்கள் 1400க்கும் அதிகமானோர். இவர்களுள் தமிழ்த் தேசியம், தமிழருக்கான அரசியல் தீர்வு என்ற கோசங்களுடன் போட்டியிட்டவர்கள் சுமார் எண்ணூறு பேருக்கு மேல்.

இவர்கள் ஒவ்வொருவரதும் நெருங்கிய ஆதரவாளர்கள் என்றும், வெற்றிபெற்ற தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றினதும் பதின்மூன்று எம்.பிக்களின் ஆதரவாளர்களென்றும் பார்த்தால் குறைந்தது ஒரு லட்சம் பேராவது தேறும். இவர்களை இணைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் அன்று களமிறங்கிளால் அரசபடைகள் என்ன செய்ய முடியும்?

தமிழீழ விடுதலைப் போரில் மரணித்த இந்திய வீரர்களுக்கு நினைவுத்தூபி அமைத்து வணக்கம் செலுத்தப்படுகிறது. இப்போரில் இறந்த இலங்கை அரச படைகளுக்கு யுத்த வீரர் தினம் கொண்டாடப்படுகிறது. இதே போரில் இறந்த போராளிகளின் தியாகத்துக்கு எவ்வாறு தடைவிதிக்க முடியும்?

அந்தப் புனிதர்களின் ஈகையை மக்கள் எழுச்சியுடன் நினைவேந்த, அரசியல்வாதிகள் உடன்வர வேண்டும். மாவீரர் குடும்பங்கள் தங்களுக்கான உரிமையை வென்றெடுக்க அரசியல்வாதிகள் பின்னிற்கக்கூடாது. அரசபடைகளின் தடையை உடைத்து சிறைச்சாலைகளை நிரப்ப அவர்கள் தயாராக வேண்டும்.

வழக்கமான மேடை முழக்கங்களாலும் வெற்று வேட்டுகளாலும் தங்களின் வாக்கு வங்கியை நிரப்ப மாவீரர் தியாகங்களை, அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை அரசியல்வாதிகள் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது.

மாவீரர் என்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. பட்டம் பதவிகளுக்கு ஆசைப்படாது சுயநலமின்றி குடும்பங்களைத் துறந்து மண்பற்றால் போராட வந்தவர்கள். தங்கள் மண்ணுக்காகப் போராடியவர்கள். இன்றும் மண்ணுக்காக மண்ணுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் கல்லறைகளுக்குள் கண்மூடித் தூங்கவில்லை. மண்ணின் காவலர்களாக மண்ணுக்குள் விழித்துக் கொண்டிருப்பவர்கள்.

இந்த வருட மாவீரர் நினைவேந்தல் இதனை சிங்கள தேசத்துக்கு எடுத்துக்கூறுவதாக அமைய வேண்டும். போர்க்குற்றங்கள் புரிந்த ஒரு சிங்கள ராணுவத் தளபதி, இந்நாளின் மகோன்னதத்தையும், மதிப்பையும் கொரோனாவுடன் சம்பந்தப்படுத்தி தடுக்க இடமளிக்கக்கூடாது.

சுதந்திர தாயகத்துக்கு உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஆற்ற வேண்டிய பணியை 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தமக்கே உரிய வகையில் பின்வருமாறு கூறியுள்ளார்:

‚எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். தங்களது தாராள உதவிகளை வழங்கி தொடர்ந்தும் பங்களிக்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்;ப்பத்திலே தேச விடுதலைப் பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கு எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று தெரிவித்த தேசியத் தலைவர் இறுதியில்,

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமேன உறுதியெடுத்துக் கொள்வோமாக என சத்தியம் செய்துள்ளார்.

இந்த சத்திய வாசகம் உலகம் முழுவதும் வியாபித்து வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் உரித்தானது. இலட்சியம் நிறைவேறும்வரை இதுவே தமிழரின் மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட வேண்டியது.