November 24, 2024

கோத்தாவை கிழித்து தொங்கவிட்ட எதிரணி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் தோல்வியடைந்துள்ளதை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஒருவர் பரீட்சைக்குத் தோற்றி அவருக்கான விடையை அவரே திருத்துவாராயின் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று வேறு ஒருவராலும் கூற முடியாது. ஆனால் , ஜனாதிபதி தேர்ச்சி பெற்றாரா இல்லையா என்பது தொடர்பில் மக்களே தீர்மானிக்க முடியும். பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் எமது பொறுப்பை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

அரசாங்கம் விடும் பிழைகளைச் சுட்டிக்காட்டியமையின் காரணமாகவே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது தான் சித்தியடையவில்லை என்பதை அவரே கூறவேண்டி ஏற்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ என்ற தனிநபரின் தோல்வி தொடர்பில் எமக்குச் சிக்கல் இல்லை. ஆனால் முழு நாடுமே இன்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்நிலைமை எதிர்வரும் காலத்திலாவது மாற்றமடைய வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருவருட பதவிப்பூர்த்தியை முன்னிட்டு மக்களுக்கு உரையாற்றியபோது சமூக வலைத்தளத்தில் காணப்பட்ட பதிவொன்றினை இவ்விடத்தில் நினைவுகூற விரும்புகின்றேன்.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளாலே வெற்றிபெற்றேன் என்று பெருமை பாராட்டிக்கொண்ட நீங்கள் அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள இனவாதிகள் என்று உங்களால் கூறப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டிருந்தீர்கள்.

தொல்பொருள் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதாகக் கூறிய உங்களது ஆட்சியில் குருநாகலில் 2 ஆம் புவனேகபாகு மன்னனின் கட்டடம் உடைக்கப்பட்டபோது அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் கடத்தலை இல்லாதொழிப்பதாகக் கூறினீர்கள் அதற்கமைய தற்போது நீங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றியை தெரித்துக்கொள்கின்றோம்.

இதேவேளை எமது நாட்டுக்குச் சொந்தமான காணிகளை வெளிநாட்டுக்கு விற்கப்போவதில்லை என்றீர்கள். ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சங்கரில்லா ஹேட்டலுக்கு அண்மித்த காணிகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்தீர்கள். மேலும் எந்த நாட்டுக்கும் அடிபணிந்து செயல்படப் போவதில்லை என்றீர்கள்.

ஆனால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எவ்வாறு பணிந்து செயல்படுகின்றீர்கள் என்று சீனாவுக்கு நீங்கள் அடிபணிந்துள்ளதை அந்நாட்டின் பி.சி.ஆர். இயந்திரங்கள் பழுதடையும்போது சீனத்தூதரகங்களால் வெளியிடப்படும் அறிக்கையின் ஊடாகவே அறிந்து கொள்ள முடிகின்றது. எனப் பல்வேறு விடயங்கள் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தனக்கு எதிராக எதிர்க்கட்சியும் சமூக வலைத்தளங்களிலும் மாத்திரமே விமர்சனங்கள் எழுவதாக கூறுகின்றார்.

ஆனால், இந்தச் சமூக வலைத்தளங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் தான் நாட்டு மக்களின் எண்ணம் என்பதை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும். ஷசேர் பெயில்ஷ என்பதை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்-என்றார்.