November 24, 2024

ஒன்ராறியோவில் அதிகூடிய கொரோனா தொற்றுக்களும் உயிரிழப்பும்!

 

ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 44,837 பரிசோதனைகளில் 1581 கொரோனா நுண்மிப் பெருந்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த மார்ச் முதலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளில் இது அதிகூடிய நாளார்ந்த தொற்றாக மட்டும் அன்றி, நாளார்ந்த அதிகூடிய உயிரிழப்பாக 20 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர்.

பீல்ப் பிராந்தியத்தில் 497 தொற்றாளர்களும், ரொறன்ரோவில் 456 பேரும், யோர்க்கில் 130 பேரும், ஒட்டாவாவில் 130 பேரும் இன்றைய நாளார்ந்த தொற்றில் உள்ளடங்குகின்றனர்.

அதிகரித்துச் செல்லும் நாளார்ந்த தொற்றுக்களில் கடந்த ஏழு நாட்களாக சராசரியாக 1419 தொற்றுக்கள் பதிவாகின்றன.

இத்துடன் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92,761 ஆக உயர்வடைந்தது.

இவர்களில் 77,241 பேர் குணமடைந்துள்ளதுடன், 3332 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஒன்ராறியோவில் பீல்ப் பிராந்தியம், ரொறன்ரோ, ஒட்டாவா என்பன ஏற்கனவே சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் வண்ணம் பல்வேறு இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதலாக ஹமில்டன், ஹோல்ட்டன் மற்றும் யோர்க் பிரதேசங்களும் சிவப்பு வலையத்தினுள் கொண்டு வரப்படுகின்றன.