டக்ளஸிற்கு நேரமில்லையாம்?
கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை எடுப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இனியும் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தமது பிரச்சனைகள் தேவைகள் மற்றும் பாதிப்புக்கள் உட்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேசுவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் தம்மைச் சந்திக்க அமைச்சர் மறுத்து வருவதாகவும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் க.சுப்பிரமணியம் கவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியது. இச் சந்திப்பின் போதே மேற்படி இணையத்தின் தலைவரும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவருமான சுப்பிரமணியம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
வடபகுதி மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிக இக்கட்டான நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயங்கள் தொடர்பாக பல தரப்பினர்களிடத்திலும் பல தடவைகள் முறையிட்டிருந்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமலே இருக்கின்றது. குறிப்பாக அரசிற்கு பல தடவைகள் இந்த விடயங்களை எடுத்துக் கூறிய போதிலும் முடிவில்லாமல் தொடர்வதால் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் காரணமாக எமது கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் எமது நாட்டிலுள்ள சில கடற்தொழிலாளர்களும் இழுவை மடித் தொழில் பாதிப்பெனக் கருதியும் தொடர்ந்தும் அத்தகைய தொழில் முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் இந்திய மினவர்களின் அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடாத்தியிருக்கின்றோம். அதே நேரத்தில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடபட்டிருக்கின்றோம். ஆனாலும் இவற்க்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகிறது.
இதே வேளை இழுவை மடித் தொழிக்கு எதிராக அதாவது இழுவை மடித் தொழில் தடைச் சட்டமொன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் அறிக்கையாகவே இருக்கின்றது. ஏனெனில் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பல முட்டுக்கட்டைகள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
ஆகையினால் அந்தச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அதே நேரம் மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய தரப்புடன் பேசி சில விடயங்களுக்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் நடைமுறையில் இல்லை. இது எமக்குப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினால் அதனையும் இரு நாட்டு அரசாங்கங்களும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வறான நிலைமையிலே இன்றைய அரசின் கடற்தொழில் அமைச்சரை சந்திப்பதற்கு நாங்கள் முயற்சி எடுத்திருந்தோம். ஆனாலும் எம்மை சந்திப்பதற்கு அமைச்சர் மறுத்தே வருகின்றார். ஆனாலும் மீனவர் விவகாரம் தொடர்பில் நாம் இப்போதும் அமைச்சரைச் சந்திக்கத் தயாராகவே இருக்கின்றோம்.
எனவே வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனமெடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.