November 21, 2024

தலையும் வாலும்:தப்பி பிழைத்த கதைகள்?

கூட்டமைப்பின் வசயமுள்ள பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஈபிடிபியின் ஆதரவுடன் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்திருந்தது.

அதேவேளை ஈபிடிபி வசமுள்ள வேலணை பிரதேச சபை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவுடன் தப்பி பிழைத்துள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்றையதினம் இடம்பெற்ற போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கைத் தமிழரசு கட்சியின் ஜந்து உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும், சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினருமாக மொத்தமாக ஏழு உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

ஆயினும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் 6 உறுப்பினர்கள்  வாக்களித்திருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இதன் காரணமாக பருத்தித்துறை நகரசபையின்  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருந்த போதும் தலைவரின் அதிகாரத்தால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

வேலணை பிரதேசசபையில் ஈபிடிபியின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக கூட்டமைப்பின் 9 உறுப்பினர்கள் வாக்களித்த போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரேயொரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்திருந்தார்.

இதனால் ஈபிடிபியின் பத்து வாக்குகளால் வேலணை பிரதேசசபை வரவு செலவுத்திட்டம் இம்முறை தப்பி பிழைத்துள்ளது.

எனினும் கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை பிரதேசசபை வரவு செலவு திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.