அரசியல் நாற்றமடிக்கின்றதென்கிறார் சுரேன்?
50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களை தம்முடைய அரசியல் கைதிகளாக அடிமைப்படுத்தியவர்களது அரசியல், இப்போது அம்பலமாகி இருப்பதாக வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் , காணாமல் போனவர்கள் உள்ளிட்ட வடமாகாண மக்களுடைய அரசியல் , வாழ்வியல் சம்பந்தமான விடயங்களைக் குறித்து தேசிய மட்டத்தில் விவாதிக்கவோ, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைத் தேடும் நகர்வுகளை மேற்கொள்வதற்கு எனக்கு இருக்கும் உரிமையைப் பற்றி சில பிரிவினைவாத, இனத்தேசியவாத தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலைமை அவர்களுடைய துர்நாற்றம்வீசும் அரசியல் சித்தாந்தத்தையே காட்டுகின்றது.
தமிழ் மக்களுடைய உரிமைகளையும், உணர்வுகளையும், உடைமைகளையும் அறியாமல், தங்களுடைய அதிகார அரசியலை தக்கவைப்பதற்காக செயற்படும் குறுகிய எல்லைக்குள் இருந்து வெளிவந்து, விசேடமாக தமிழ் இளைஞர்களுடைய எதிர்காலத்தில் நியாயமும் சரியான வாய்ப்புமுள்ள அரசியலை உருவாக்குவதற்கான நேரம் வந்துள்ளது.
வட-கிழக்கு தேசியத் தமிழரும், மலையகத் தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் உள்ளிட்ட எல்லோருமே பிரிக்க முடியாததும் உடைந்துபோக முடியாததுமான இலங்கையின் சம குடிமக்கள். அரசியல் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் சமமானவர்கள். ஆகையினாலே அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் ஒரு கூட்டுப் பொறுப்பே தவிர ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் தனிப்பட்ட சொத்தல்ல.
10 மாத கால ஆளுநர் பணியில், தமிழ் மக்களுக்கு என்னால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை, பல்லாண்டு காலமாக தமிழ் அரசியல்வாதிகளால் செய்ய முடியாமல் போனதென்று அவர்களே கூறிய சாட்சிகள் உண்டு. ஆகையினாலே இன-மையப்படுத்திய சர்வாதிக்கப் போக்குள்ள பழுத்த அரசியல்வாதிகள் 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான பங்கெடுத்தலில் உருவாகும் ஜனநாயக அரசியலை உணந்து தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லாவிட்டால் தூக்கியெறியப்படுதலுக்கும் தயாராக இருக்கவேண்டும் எனவும் கலாநிதி சுரேன் ; ராகவன் தெரிவித்துள்ளார்.