November 24, 2024

தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லை! தன்பெயரில் கட்சியா! கொந்தளித்த விஜய்!

நடிகர் விஜய்யின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பான விண்ணப்பத்தில் கட்சியின் தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் விஜய்யின் தாயார் ஷோபா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். எனினும், அரசியல் கட்சி தனது சொந்த முயற்சி எனவும், விஜய்க்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

கடந்த 2ஆம் தேதி தந்தையின் ஆதரவாளர்களை விஜய் நீக்கியுள்ள நிலையில் அதில், “தன் மக்கள் இயக்கத்தில் அதிகம் தலையிடுகிறார், தனக்கென சில நிர்வாகிகளை வைத்துக் கொண்டு அவர்களை தன் இஷ்டத்துக்குச் செயல்பட வைக்கிறார் என்று அப்பா மீது விஜய்க்கு கோபம் இருந்தது. இந்த லாக்டெளனில்கூட அதிகமாக அப்பாவுடன் அவர் தொடர்புகொள்ளவில்லை. நலம் விசாரிப்பதோடு சரி. இப்போது பாஜக தொடர்பு பிரச்சினையால் அப்பா மீதான கோபம் எல்லாமே சேர்ந்துகொண்டுள்ளதக்க தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, மக்கள் இயக்கத்தில் இருக்கும் தனது அப்பா எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர்களை அவர்கள் வகிக்கும் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்குமாறு மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டார். அவரும் அவ்வாறே செய்திருக்கிறார். இந்த நிகழ்வுகள் சந்திரசேகருக்கு அதிகமான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகர் ஆதரவாளர்களும், இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும் சந்திரசேகரைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் சந்திரசேகர், ‘அப்பா பிள்ளை உறவைப் பிரிச்சதே புதுச்சேரி புஸ்ஸி ஆனந்துதான். விஜய் அரசியலுக்கு வருவதற்குத் தடைபோடுவதும் ஆனந்துதான்’ என்று கூறியிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் இதுபற்றி அதிகமாக பேசப்பட, புஸ்ஸி ஆனந்தும் இதுபற்றியெல்லாம் விஜய்யிடம் கூறியுள்ளார்.

அதற்கு விஜய், ‘இதுக்காக நீங்க ஃபீல் பண்ணாதீங்க. அப்பாவோட தொடர்பில் இருப்பவர்கள் வேறு யார் யார்னு பாருங்க. அவர்களையும் நீக்கிவிடலாம். மேலும் நீக்கப்பட்டவர்கள் அப்பாவை வைத்து ஏதாவது நிகழ்ச்சி செய்ய ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க. அதைத் தடுக்கணும். அதனால் என் படத்தையோ, கொடியையோ நீக்கப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன் படுத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்னு ஒரு எச்சரிக்கை அறிக்கையை தயார் பண்ணுங்க’ என்பதுவரை சொல்லியிருக்கிறார் விஜய்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், “இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” ” எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் தன்னை கட்டுப்படுத்தாது என்ற நடிகர் விஜய், “எனது ரசிகர்கள், என் தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ அல்லது கட்சிப் பணியாற்றவோ வேண்டாம். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “என் பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார் விஜய்.

கட்சி விவகாரம் தொடர்பாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், மகன் விஜய்க்கும் நேரடியாக மோதல் உருவாகி இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.

தமிழகத்தில் இருந்து – எழில்