November 21, 2024

 

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர் மாதம் 15 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும், மன்னார் மாவட்டத்தில் 10 பேரும், முல்லைத்தீவில் 2 பேரும் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

கடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் புதிதாக எவரும் தொற்றுக்குள்ளாகவில்லை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளில் நேற்று முன்தினம் 378 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று 385 பேரிடம் பி.வி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலே தனிமைப்படுத்தல் முகாம் சிகிச்சை நிலையத்தில் இருந்தவர்கள் சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிதாக வடமாகாணத்தில் எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தாலும், கடந்த வாரத்தில் இனங்காணப்பட்ட நோயாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான பரிசோதனைகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும் வட மாகாணத்தை பொறுத்த வரைக்கும் தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பாசையூர் மேற்கு திருநகர் கிராமங்கள் அதேபோல கரவெட்டி ராஜகிராமம் பிரிவிலும் 4 கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையம் கடந்த 19ம் திகதி முதல் இயங்க ஆரம்பித்திருந்தது 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தார்கள். இவர்களில் முதலாவது தொகுதியாக 16 பேர் இரண்டு வார கால சிகிச்சை நிறைவு செய்து இன்று தங்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல கிளிநொச்சியில் கிருஸ்ணபுரத்திலும் முல்லைத்தீவு மாங்குளத்திலும் இந்த வாரத்தில் சிகிச்சை நிலையங்கள் இயங்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.