களத்தில் கரவெட்டி பிரதேச செயலகம்!
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வடக்கு கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட 53 குடும்பங்களை சேர்ந்த 154 பேருக்கு நேற்றைய தினம் 7 நாட்களுக்கான உலர்உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அத்துடன் 5லீற்றர் குடிநீர் போத்தல் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட பொருட்கள் எவையும் அரச உதவிகள் அல்ல. பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் தனிப்பட்டவர்களின் அனுசரணையில் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
பிரதேச செயலரும் நேரடியாக களமிறங்கி பொருள் விநியோகத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் நிலைமை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு வருமானமும் இன்றி வாழும் குடும்பங்களுக்கான நிவாரணத்தை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்காக இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார மலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.