இலங்கையை ஏகபத்தினியாக்க சீனாவும் அமெரிக்காவும் போட்டி! பனங்காட்டான்
சீன ஆட்சிபீடத்தை பிறிடேற்றர் (Predator) என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது. மற்றைய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் விலங்கு என்பதே இதன் அர்த்தம். அப்படியென்றால், இலங்கையும் விலங்கு – சீனாவும் விலங்கு என்று அமெரிக்கா அர்த்தம் கொள்கிறதா? சீனாவுக்கு இலங்கை சின்னவீடு. இந்தியாவுக்கு இது பக்கத்து வீடு. அமெரிக்கா இலங்கையை தனது சொந்த வீடாக்கப் பார்க்கிறது. அதற்காகவே தாராள நிதியுதவி வழங்கி நீண்டகால அபிவிருத்திக்கு கைநீட்டுகிறது. மொத்தத்தில், இலங்கையை தங்களின் ஏகபத்தினியாக்க அமெரிக்காவும் சீனாவும் போட்டி போடுகின்றன. இடையில் இந்தியா அமெரிக்காவின் தோளால் எட்டிப் பார்க்கிறது. இதில் யார் வென்றாலும் தோற்றாலும், இலங்கை பெரும் ஆடுகளமாக மாறுவது தவிர்க்க முடியாது போகும்.
இலங்கை இப்போது இரண்டு வகையான நோய்களுக்குள் சிக்கியுள்ளது. இவை இலகுவாக தீர்க்கப்படக்கூடியவை அல்ல.
முதலாவது, இதுவரை ஒளித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா என்ற நோய், இப்போது சிலிர்த்துக் கொண்டு படையெடுத்து முழு நாட்டையும் முடக்க நிலைக்கு இழுத்துச் செல்கிறது.
அடுத்தது, கோதா(ரி) அரசியல் என்பது ஒரு வருடத்துக்குள் சர்வதேச அரங்க நாயகர்களை இலங்கைக்குள் கால் பதித்து, நாட்டை நாசகார பாதைக்கு இட்டுச் செல்கிறது.
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பியோவின் இலங்கை விஜயத்தையும் அதையொட்டிய சீனாவின் எதிரவினைகளையுமே இரண்டாவது குறிப்பிடுகிறது.
இந்த நிகழ்ச்சிகள், கோதபாய ராஜபக்ச என்ற ராணுவ அதிகாரியிடம் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் குவித்துள்ள இருபதாவது அரசியல் திருத்தம் அமுலுக்கு வந்துள்ள அக்டோபர் கடைசி வாரத்தையொட்டி நடைபெறுவதே இங்கு முக்கியமானது.
பொம்பியோவின் இலங்கை விஜயத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் – அக்டோபர் 9ம் திகதி சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்பீட உறுப்பினருமான ஜாங் ஜீச்சி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதிலிருந்து இலங்கையை தளமாகக் கொண்டு சீன – அமெரிக்க மோதல் ஆரம்பமாகியுள்ளதை இங்கு முதலில் குறிப்பிட வேண்டும்.
அமெரிக்க பிரதிநிதி பொம்பியோ 2019 யூன் 27ல் மைத்திரி-ரணில் ஆட்சியின்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தாராயினும், மகிந்தவின் கூட்டாளிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஜே.வி.பி.யினரின் கடும் எதிர்ப்பினால் அது கைகூடவில்லை.
அதற்கு அடுத்த வாரத்தில் ஜப்பானில் நடைபெறவிருந்த ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ட்ரம்புடன் பொம்பியோ செல்லவிருந்ததால் இலங்கைப் பயணத்தைப் பின்போட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பரில் ஆட்சி மாறி கோதபாய ஜனாதிபதியான பின்னர், தெற்காசிய நாடுகளுக்கான பயணம் என்ற பெயரில் இந்தியா, மாலைதீவு, இலங்கை ஆகியவற்றுக்கு அக்டோபர் 27ல் விஜயம் செய்தார்.
முதலில் இந்தியா சென்றவர் அங்கு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுடன் முக்கிய விடயங்களைப் பேசினார். அம்பாந்தோட்டை 99 வருட ஒப்பந்தம், கொழும்பு துறைமுக நகர அமைப்பு ஆகியவற்றில் சீனாவின் வகிபாகம் அப்பிராந்தியத்தில் ஏற்படும் அபாயத்தை அஜித் டோவால் விபரித்துக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய தலைமை அதிகாரி டீன் தொம்சன் விடுத்த அறிக்கையில், சீனாவுடனான இலங்கையின் இறுக்கத்தை எச்சரித்ததுடன் இலங்கைக்கு நீண்டகால சுபிட்சத்தைத் தரக்கூடிய பொருளாhதார அபிவிருத்திக்கு உதவ அமெரிக்கா தயாராகவிருப்பதால், க~;டமான – ஆனால் முக்கியமான முடிவை இலங்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
தற்செயலாகவன்றி, வேண்டுமென்றே சீனாவைச் சூடேற்றவென பொம்பியோவின் விஜயத்துக்கு முன்னர் விடுக்கப்பட்ட இந்த அறிக்கை, எதிர்பார்க்கப்பட்டதுபோல சீனாவை கொதிநிலைக்கு உள்ளாக்கியது.
கோடானுகோடி டாலர்களை இலங்கைக்கு அள்ளி அள்ளிக் கொட்டி இலங்கையைத் தனது சின்னவீடாக மாற்றிக் கொண்டிருக்கும் சீனாவுக்கு இது சினத்தை உண்டுபண்ணியது.
இந்தக் கட்டத்தில்தான் அறிக்கைப்போர் ஆரம்பமானது. இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டுவர வேண்டாமென கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் பகிரங்க அறிக்கையொன்றை வெளியிட்டது. ஒருவகையில் பார்த்தால் இப்படியான அறிக்கையை இலங்கைதான் விடுத்திருக்க வேண்டும். ஆனால், சீனா இலங்கையின் பினாமியாக நடந்து கொண்டது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், தாம் இலங்கை செல்வதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பொம்பியோ தமது கீச்சகத்தில் கடும் வார்த்தைகளிலான ஒரு குறிப்பை வெளியிட்டார்.
சீனாவை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியால்தான் இப்போது பெரும் அச்சுறுத்தல் என்று தெரிவித்த இந்த இறிக்கை, மற்றைய நாடுகள் எவ்வாறு செயற்பட வேண்டுமென கோருகின்றோமோ அதனையே சீனாவிடமும் கோருகின்றோம் எனச் சுட்டியது.
குறுகிய இலங்கை விஜயத்தை மேற்கொண்ட பொம்பியோ முதலில் கோதபாயவை அமெரிக்க தூதுவருடன் இணைந்து சந்தித்து உரையாடினார். அமெரிக்கா வழங்க விரும்பும் உதவிகளால் இலங்கைக்கு நிரந்தரமாகக் கிடைக்கவிருக்கும் நீண்டகால நன்மைகளை எடுத்துக் கூறினார். உதாரணமாக, அமெரிக்க நிறுவனங்களான கொக்கோ கோலா, ஐ.பி.எம். ஆகியவற்றின் பங்களிப்பை சுட்டிக்காட்டினார்.
சீனாவின் அதிகூடிய இலங்கைப் பிரவேசத்தை அமெரிக்கா விரும்பாததையும் இவர் குறிப்பிட்டாராயினும், அது கோதபாயாவால் கவனிக்கப்படவில்லை.
இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய நம்பகத்தன்மை என்பவற்றை எடுத்துக்கூறிய கோதபாய, தமது நாடு பக்கச்சார்பின்றி செயற்பட விரும்புவதாகவும் – வரலாற்று ரீதியான கலாசார உறவு, அபிவிருத்தி முன்னுரிமை என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்ததாக ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.
இருவருக்குமிடையில் இடம்பெற்ற உரையாடலில் உண்மையாக என்னென்ன பேசப்பட்டதென்பதை இருதரப்பும் இப்போதைக்கு வெளியிடாது என்பது தெரியும். ஆனால், சில விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெனிவாவில் அமெரிக்கா முன்மொழிந்த 30:1 இலக்க இலங்கை பொறுப்புக்கூறும் தீர்மானத்துக்கு இலங்கை அரசு இணைஅனுசரணை வழங்கியதை நினைவூட்டிய பொம்பியோ, இதிலிருந்து இலங்கை ஒருபோதும் விலக முடியாதெனக் கூறியது மட்டும் வெளியே கசிந்துவிட்டது.
வெளிவிவகார அமைச்சர் தினே~; குணவர்த்தனவுடனான சந்திப்பு வெறும் சம்பிரதாயமாக முடிந்தது. ராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான பயணத்தடை நீக்கம் பற்றி அமைச்சர் வினவியபோது அதற்கு சாதகமான பதில் வழங்கப்படவில்லை. தடை நீடிக்குமென்பதாகவே அமெரிக்க தரப்பில் கூறப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மகிந்தவை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் சந்தித்துப் பேசுவாரென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததாயினும், அச்சந்திப்பு இடம்பெறாதது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போதைய இலங்கை அரசமைப்பின் இருபதாவது திருத்தத்தின் கீழ் பிரதமர் பதவி ஒரு செல்லாக்காசு என்பதையும், அவரை ஜனாதிபதி எப்போதும் பதவி நீக்கலாமென்பதையும் பொம்பியோ அறிவார். ஆனால், இச்சந்திப்பை தாமே விலத்தியதாக மகிந்த கூறி சமாளிக்கப் பார்க்கலாம்.
2015ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இங்கு விஜயம் செய்த இரண்டாவது அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக்கல் பொம்பியோ.
இவர் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். சீனா மீது மிக மோசமான தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டார். அங்கு ஆட்சிபுரியும் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு பிறிடேற்றர் (Pசநனயவழச) என்று வர்ணித்தார். பிறிடேற்றர் என்றால் வேட்டையாடுவது என்று சில ஊடகங்கள் விளித்துள்ளன.
பிறிடேற்றர் என்பதன் சரியான அர்த்தம், மற்றைய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் விலங்கு என்பதே. அப்படியானால், இலங்கையும் ஒரு விலங்கு – அதனை சீனா என்னும் விலங்கு வேட்டையாடித் தீர்க்கிறது என்று அர்த்தப்படுகிறது.
இலங்கை இதற்கு இன்னமும் பதிலளிக்கவில்லை. சீனத் தூதரகம் இதற்குப் பதிலளித்துவிட்டது. இலங்கையுடனான ராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்க ஒரேவேளையில் இரட்டை வேடங்களைப் போடுகிறது என்றுள்ளது சீனத்தரப்பு அறிக்கை.
என்னவோ, நிலைமை நன்றாக நகருவதாகத் தெரியவில்லை.
யார் பணம் தந்தாலும் அவருடன் சேருவேன்(?) என்ற பாணியில் இலங்கை வழிமீது விழி வைத்துக் காத்திருக்கிறது.
சீனாவுக்கு இலங்கை சின்னவீடு. இந்தியாவுக்கு இது பக்கத்து வீடு. அமெரிக்கா இலங்கையை தனது சொந்த வீடாக்கப் பார்க்கிறது. அதற்காகவே தாராள நிதியுதவி வழங்கி நீண்டகால அபிவிருத்திக்கு கைநீட்டுகிறது.
மொத்தத்தில், இலங்கையை தங்களின் ஏகபத்தினியாக்க அமெரிக்காவும் சீனாவும் போட்டியிடுகின்றன. இடையில் இந்தியா அமெரிக்காவின் தோளால் எட்டிப் பார்க்கிறது. இதில் யார் வென்றாலும் தோற்றாலும், இலங்கை பெரும் ஆடுகளமாக மாறுவது தவிர்க்க முடியாது போகும்.