கொரோனாவது கூந்தலாவது:இலங்கை இராணுவம்?
இராணுவ அதிகாரியொருவர் மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும், இனவாத அடிப்படையில் தூற்றியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தின் உயர் அதிகாரியான பிரிகேடியர் கே.கே.எஸ். பரகும் என்பவரே இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 26ம் திகதி இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட மாகாணம் வெலிஓயாவின் சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது இவ்வாறு கொலை மிரட்டலும், இனவாத அடிப்படையிலான தூற்றலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“இது எனது ஏரியா, …. தமிழா, பிரபாகரன், பயங்கரவாதிகள், உங்களை கொலை செய்வேன்” என பிரிகேடியர் பரகும் அச்சுறுத்தல் விடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளின் நலனைக் கருத்திற் கொண்டு பணி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி; கொடுக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டின் அனைத்து மருத்துவர்களும் இராணுவத்தினர் உள்ளிட்ட படைத்தரப்பினரை மிகுந்த மரியாதையுடன் நடாத்தி சிகிச்சை வழங்கியிருந்தனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் சம்பத்நுவர வைத்தியசாலையின் கடமைகளிலிருந்து தமது அதிகாரிகள் விலகியிருக்க நேரிடும் என்பதனை வருத்தத்துடன் பதிவு செய்வதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சருக்கு அனுப்பப்பட்டஇந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.