November 22, 2024

சீனாவிடம் சோரம் போகவில்லை:கோத்தா சத்தியம்?

‘சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை:’ அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் நான் இன்று தெளிவுபடுத்தினேன் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் சர்வதேச உறவாடல்களின் போது – நாட்டின் சுயாதீனத்திற்கும் இறைமைக்குமே நாம் முதலிடம் அளிப்போம் என்பதனை நான் அவரிடம் தெரிவித்தேன்.

பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தாம் தயார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ அவர்கள் என்னிடம் இன்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவிவரும் வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் நாட்டுக்கு வருகைதந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ அவர்கள் தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழுவினர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் என்னைச் சந்தித்தனர்.

இரு தரப்புகளுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல துறைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

உயர் அபிவிருத்தி மட்டத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் இலங்கையுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்ட வெளியுறவு அமைச்ச பொம்பியோ அவர்கள்,

நாட்டினுள் அமெரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுற்றுலா துறையானது தொழில்கள் மற்றும் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டுவதற்கு உதவும் முக்கிய துறையாகும். முறையான திட்டத்தின் கீழ் அதன் முன்னேற்றத்திற்கு உதவ தனது நாடு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இலங்கையின் தேவை தொடர்ந்தும் கடன் பெறுவதல்ல. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதே எமது தேவையாகும்” என்பதனை நான் அவரிடம் தெரிவித்தேன்.

“வெளிநாட்டு முதலீட்டுக்குத் தடையாக அமையும் அதிகாரத்துவ மைய நடைமுறைகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை அதிக விவசாய வளர்ச்சியை அடைந்துகொள்வதற்குத் தேவையான வளங்களை கொண்ட நாடாகும். எமது விவசாயத் துறையை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்காக அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக எமக்கு உதவுங்கள்” என நான் அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை நான் விளக்கும் போது – அது நடுநிலைமையை அடிப்படையாக கொண்டதாகும் என்பதனை வலியுறுத்தினேன்.

இலங்கை ஏனைய நாடுகளுடன் பேணி வரும் உறவுகள் பல அம்சங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதனை நான் அவரிடம் விளக்கினேன்.

கலாசார உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பனவே அவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன.

“சர்வதேச தொடர்புகளின் போது நாட்டின் சுயாதீனத்தன்மை, இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை விட்டுக்கொடுப்பதற்கு நான் ஒருபோதும் தயார் இல்லை” என்பதன நான் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.

பிரிவினைவாத யுத்தத்தை நாம் நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவியதனை நான் குறிப்பிட்டு, ஆனால் அதன் விளைவாக இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளவில்லை என்பதனையும் குறிப்பிட்டேன்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இன்று இணக்கம் தெரிவித்துக்கொண்டோம்.

இலங்கையின் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அமெரிக்கா வழங்கும் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பொருள் உதவிகளும் இதில் அடங்கும்.

போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு கரையோரப் பாதுகாப்புச் சேவையைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து,

அதற்கு உதவ அமெரிக்காவினால் இயலும் என வெளியுறவு அமைச்ச பொம்பியோ அவர்கள் தெரிவித்தார்.

இந்து சமுத்திரம் ஒரு சமாதான வலயமாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நட்புறவு குறித்தும் அவர் இன்று மகிழ்ச்சி வெளியிட்டார்.

இந்து சமுத்திரம் சமாதான வலயமாக இருக்க வேண்டும் என்பதே இலங்கையினதும் எதிர்பார்ப்பாகும் என்பதனை நானும் உறுதிப்படுத்தினேன்.

சர்வதேச மன்றங்களில் மனித உரிமைகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படவும் இருதரப்பினரும் இணங்கிக்கொண்டோம்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஶ்ரீமதி. எலைனா டெப்லிட்ஸ், உதவி வெளியுறவு அமைச்ச பிரியன் புலதாவோ, தெற்கு மற்றும் மத்தியாசிய நடவடிக்கைகளுக்கான பணியகத்தின் தலைமை பிரதி வெளியுறவு அமைச்சர் டீன் தொம்ஸன் மற்றும் வெளியுறவு அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் மேரி கிசல் ஆகியோர் அமெரிக்க தூதுக்குழுவில் இடம்பெற்ற ஏனைய உறுப்பினர்களாகும்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எனது செயலாளர் பீ. பீ ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கலாநிதி ஜயனாத் கொலம்பகே, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ரவிநாத் ஆர்யசிங்க ஆகியோரும் இன்றைய கலந்துரையாடலில் பங்குபற்றினர்.