இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்
இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்
கடந்த மாதங்களில் ஐரோப்பியக் கண்டத்தில் மகுடநுண்ணியிரித் தொற்றினைத் (Covid-19) தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முன்மாதிரித் திகழ்ந்த சுவிற்சர்லாந்து கடந்த வாரங்களில் எதிர்மறையாக பெருந்தொற்று உள்ள அபாய நிலையை அடைந்தது.
யேர்மனி சுவிற்சர்லாந்தினைசிவப்பு நிரலில் சேர்த்துக்கொண்டு, பயணத்தடையும் விதித்தது.
இன்று புதன்கிழமை 8616 புதிய தொற்றுக்கள் பதியப்பட்டுள்ளது. இதற்கு முற்பட்ட கிழமையுடன் ஒப்பிட்டால் இது 88 வீதம் ஆகும்.
கடந்த 7 நாட்களில் 23. 4 புள்ளி வீதம் நோய் பரவியுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று ஒருபக்கம், முடக்கப்படும் சுவிசின் பொருளாதாரம் ஒருபக்கம் என சுவிற்சர்லாந்தினை ஆட்சிபுரியும் 4 கட்சிகளும் ஒரு முடிவினைத் தீர்க்கமாக எடுப்பதிலும் இழுபறி நிலவி வந்தது.
கடந்த வாரத்தில் சுவிசின் 26 மாநிலங்களும் தத்தமது சூழலிற்கு ஏற்ப புதிய நோய்த்தடுப்புக் கட்டுப்பாடு அறிவிப்புக்களையும் வெளியிட்டிருந்தன. மாநிலங்கள் சுயாட்சி உரிமையில் தமது நடவடிக்கையினை மேற்கொண்டாலும், நடுவன் அரசு நாடுமுழுவதும் ஒரேமாதிரியான பொது நடவடிக்கை எடுக்க அழுத்தமும் ஏற்பட்டது.
மக்கள் நலவாழ்வினைப் பேணுவதும், அதே நேரத்தில் சுவிசின் பொருளாதாரத்தைப் பாதிக்காது இருக்கவும் நடுவன் அரசு முயன்று வந்து இன்று இருபொறிகளுக்கிடையில் தமது நடவடிக்கையினை அறிவித்துள்ளது.
பெருந்தொற்று நோய்த்தடுப்பிற்குஇப்போது சுவிஸ் அறிவித்துள்ள நடவடிக்கைகள் சுவிசின் பொருளாதராத்தை காப்பாற்றிக்கொள்ள நெகிழ்ச்சிப்போக்குடன் எட்டப்பட்ட தீர்மானங்கள் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து நடுவனரசு இன்று 28. 10. 2020 புதன்கிழமை வெளியிட்டுள்ள நடவடிக்கை இன்று நள்ளிரவு முதல் செல்லுபடியாகும்.
துள்ளல் இசை விடுதிகள் மற்றும் நடன விடுதிகள் மூடப்படுகின்றது.
உணவகங்கள் மற்றும் விருந்தோம்பல் மதுக்கூடங்கள் 23.00 மணிமுதல் மூடப்படவேண்டும். ஒரு மேசையில் 4வர் மட்டுமே இருக்கலாம். நால்வருக்கு மேற்பட்டு இருப்பதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த குழுந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.
ஊரடங்கு அல்ல கடையடைப்பு
இரவு 23.00 மணிமுதல் காலை 06.00 மணிவரை உணவகங்கள் மற்றும் மதுவிடுதிகள் பூட்டப்படவேண்டும் என்பதை நாம் எவ்வாறு புரிய வேண்டும் என ஊடகவியலாளர் சுவிஸ் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே அவர்களை வினாவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பிரெஞ்சு மொழியில் ஒரு மொழிபெயர்ப்பில் தவறு நடந்துவிட்டது. கடை அடைப்பு என்பது ஊரடங்கு எனப் பொருள்கொள்வதாக அமைந்திருந்த தவறு என விளக்கினார். மேலும் விகடமாக ஊரடங்கு பிரான்சில்தான் நடைமுறைக்கு வரவுள்ளது, சுவிசில் அல்ல என்றார்.
50 மக்களுக்கு மேற்பட்டவர்கள் பொதுநிகழ்வுகளில் ஒன்றுகூடத் தடை
இது விளையாட்டு, பண்பாட்டு நிகழ்வுகளுக்குப்பொருந்தும்.
பாராளுமன்ற மற்றும் ஊராட்சிமன்றக்கூட்டங்களுக்கு எண்ணிக்கைத் தொகையில் விலக்களிக்கப்படுகின்றது.
அதுபோல் அரசியல் பொதுக்கூட்டங்கள், பொதுவாக்கெடுப்பிற்கு கையொப்பம் கோருதல் இதுவரை உள்ளதுபோல் உரிய காப்பமைவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடைபெற அனுமதிக்கப்படுகின்றது.
தனியார் நிகழ்வு
தனியார் நிகழ்வுகளில் ஆகக்கூடியது 10 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கூடலாம். பெரும்பாலும் தனியார் விழாக்களில் பெருந்தொற்றுப் பரவியது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் இந் நடைமுறை அறிவிக்கப்படுகின்றது எனவும் விளக்கப்பட்டது.
முகவுறை அணிதல் விரிவாக்கப்படுகின்றது
இன்றுமுதல் அனைத்து நிலையங்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் கட்டடப் புறப்பகுதியிலும் முகவுறை அணிய வேண்டும்.
கடைகள், நிகழ்விடங்கள், உணவகங்கள், மதுவிடுதிகள் அல்லது வார- மற்றும் நத்தார் அங்காடிகளிலும் முகவுறை அணிதல் கட்டாயம் ஆகும்.
அதிக மக்கள் நடந்துசெல்லும் வீதிகளிலிலும், நடந்துசெல்வோர் வீதி கடக்கக் காத்திருக்கும் இடங்களிலும் முகவுறை அணிதல் கட்டாயமாகும்.
அதுபோல் பணியாற்றும் தொழிலகங்களிலும் முகவுறை அணியவேண்டும்.
பணியிடங்களில் போதிய இடைவெளி பேண முடிந்தால் இதில் விலக்கு அளிக்கப்படும் (எ.கா பணிசெய்வோருக்கு தனிப் பணியகம் இருப்பின்).
15 நபர்களுக்கு மேலாக உடற்பயிற்சி அல்லது பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளில் ஈடுபடத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
போதியளவு இடை வெளி பேணக்கூடிய இடமாக (பெரிய வரிப்பந்து (ரெனிஸ்) அரங்கம் அல்லது பெரிய மண்டபம்) இருந்தால் முகவுறை அணிய வேண்டும் எனும் கட்டாயத்தில் விலக்கு அளிக்கப்படும். வெளி இடங்களில் மேற்பட்ட செயலில் ஈடுபடுவதானால் உரிய இடைவெளி பேணப்பட வேண்டும்.
ஒருவரை ஒருவர் தீண்டும் செயல்கள் தடையாகும். இத்தடை 16வயதிற்கு கீழ்ப்படவர்களுக்குஇல்லை.
நேரடி வகுப்பு
உயர்பாடசாலைகளில் நேரடி வகுப்பு தடைசெய்யப்படுகின்றது: உயர் பாடசாலைக்கல்வி 02. 11. 2020 முதல் தூரவழி இணையக் கல்வியாக மாற்றம் காணும்.
கட்டாயப் பாடசாலை மற்றும் இணர்டாம் நிலைப் பாடசாலைகளில் வழமைபோல் நேரடியான பாடங்கள் இடம்பெறும்.
கொறோனாப் பரிசோதனை
தற்போது சுவிஸ் மகுடநுண்ணியிரித் (கோவிட்-19) தொற்றினைக் கண்டறிய „பலபடிசங்கிலித்தொடர் வினை“ (PCR-Tests) எனும் பரிசோதனை முறையினைப் பயன்படுத்தி வருகின்றது.
02. 11. 2020 முதல் கொறோனாத் தொற்றினை வேகமாகக் கண்டறியும் „எதிர்ப்புத் திறனூட்டி“ (Antigen) பரிசோதனையான புதிய முறையினைப் பயன்படுத்த உள்ளதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
இப் பரிசோதனை முறையில் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நபர்களை உடன் கண்டறிந்து தனிமைப்படுத்தமுடியும் என சுவிஸ் அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்திற்குள் நுழைவோருக்கான தனிமைப்படுத்தல் விதி
சுவிற்சர்லாந்திற்குள் நுழைவோற்கான தனிமைப்படுத்தல்விதி
சுவிஸ் நாட்டிற்குள் நுழைவோர் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டி நாடுகளின் நிரலை 29. 10. 2020 முதல் புதிதாக நிர்ணயிக்க உள்ளது.
தற்போது சுவிற்சர்லாந்து நாடு ஏனைய ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது சராசரியைவிட அதிகளவு நோய்த் தொற்று உள்ளதாக அமைந்துள்ளது.
சுவிசின் தொற்றின் விழுக்காட்டை விட 60 வீதம் நோய்த் தொற்றுக்கு உள்ளான நாடுகள் புதிய பயணக்கட்டுப்பாட்டு நிரலில் சேர்க்கப்படவுள்ளது.
வேலையிழந்தோர் காப்புறுதி:
தற்போது சுவிஸ் அரசு அறிவித்துள்ள நடவடிக்கை காரணமாக தொழிலாளர்களுக்கு பணிக்காலம் குறைக்கப்பட்டால் அல்லது சம்பளம் பணிநேரம் காரணமாக குறைவடைந்தால் அவர்கள் 01. 09. 2020 பின்னோக்கி சம்பளத்தினை இட்டு நிரப்ப வேலையிழந்தோர் காப்புறுதியிடம் விண்ணப்பம் செய்யலாம்.
சுவிஸ் அரசு குறுகிய கால வேலைக்கு அளிக்கும் மானியத்தை 12 மாதத்தில் இருந்து 18 மாதமாக அதிகரித்துள்ளது.
மேலும் புதிய நடவடிக்கை
மேலும் புதிய நடவடிக்கையினை சுவிஸ் அரசு நடைமுறைப்படுத்தப்படுமா என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த சுகாதார அமைச்சர் திரு. பெர்சே இப்போது நாம் அறிவித்திருக்கும்நடவடிக்கைக்கு கால எல்லை விதிக்கவில்லை.
இப்பனிக்காலத்தில் நோய்த் தொற்று எவ்வாறு கட்டிற்குள் இருக்கும் என எம்மால் இப்போது கணிக்க முடியவில்லை. முழுமையான ஒரு முடக்கத்தினைத் தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
இதன் பெறுபேறு இனி நோய்த்தொற்றின் கட்டுப்பாட்டைப் பொறுத்ததாகும், நாம் சூழலுக்கு ஏற்ப நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிக்போம் என்றார்.
சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் நடைமுறைக்கு வரும் புதிய நடைமுறைகள் சுருக்கமாக:
மேலதிக கட்டுப்பாடுகள்
மதுவிடுதிகள் மற்றும் உணவகங்களில் ஒருமேசையில் ஆகக்கூடியது 4வர் மட்டுமே அமரலாம்.
23.00 மணிமுதல் 06.00 மணிவரைகடையடைப்பு நேரம் ஆகும்.
இல்லங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளில் 10 நபர்கள் மட்டுமே ஒன்றுகூடலாம்
பொது இடத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஆகக்கூடியது 15 நபர்கள் (முகவுறை அணிந்து உரிய இடைவெளிபேணி) பங்கெடுக்கலாம்.
பொதுப் பண்பாட்டு நிகழ்வுகள் கட்டடத்திற்குள் நடைபெற்றால் ஆகக்கூடியது 15 நபர்கள் (முகவுறை அணிந்து உரிய இடைவெளிபேணி) பங்கெடுக்கலாம்.
இடைநிலைப்பாடசாலை தரம் 2 இற்கு மேல் மற்றும் பணியிடங்கள் அனைத்திலும் முகவுறை கட்டாயம் அணிய வேண்டும்.
பூட்டுதல்களும் தடைகளும்
29. 10. 2020 முதல் நடனவிடுதிகள் முழுமையாக மூடப்படுகின்றது.
50 மேற்பட்ட நபர்கள் பங்கெடுக்கும் பொதுவிழாக்களுக்குத்தடை.
விளையாட்டுவீரர்கள் ஒருவரை ஒருவர் தீண்டும் விளையாட்டுகளுக்குத் தடை
உயர் பாடசாலைகளில் நேரடி வகுப்புகளுக்குத் 02. 11. 2020 முதல் தடை ஆகும்.
தடையில்லை
துறைசார் பண்பாட்டு நிகழ்வுகள்: ஒத்திகை மற்றும் அரங்கேற்றத்திற்குதடை விதிக்கப்படவில்லை.
துறைசார் உயர் விளையாட்டுத் தொழில்கள்: பயிற்சி மற்றும் போட்;டிகளுக்கு அனுமதி உண்டு.
உரிய இடைவெளி பேணப்பட்டு முன்னர்போல் உரிய காப்பமைவுடன் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் இடம்பெறலாம்.
கட்டாயப்பாடசாலையில் நடைபெறும் உடற்பயிற்சிப் பாடத்திற்கு தடையில்லை. இது வழைமைபோல் நடைபெறும்.
தொகுப்பு: சிவமகிழி
5
4 Shares
Like
Comment
Share