துயர் பகிர்தல் பதிப்பிள்ளை பத்மகுணசீலன்
அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன்
தோற்றம்:- 21.05.1942 இலங்கை — மறைவு:- 26.10.2020 யேர்மனி
இலங்கை-நல்லூரைத் தாயகமாகக் கொண்டவரும் யேர்மனி- கீல் என்ற நகரில் வசித்து வந்தவருமான பண்பாளன் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்கள் 26.10.2020 அன்று யேர்மனியில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவர் ஜெயராணி அவர்களின் மனைவியும் சிறியாசாந்தி¸ றம்மியாசாந்தி¸ சந்திலியன் ஆகியோரின் அன்புத் தந்தையும் இரு பேரப்பிள்ளைகளின் பேரனுமாவர்.
இந்தப் பண்பாளனைப் பற்றிய சிறுகுறிப்பை அறியத்தருகிறோம். யாழ்ப்பாணம் – நல்லூரைப் பூர்வீகமாக் கொண்ட தந்தையாரும் தாயாரும் தொழிலின் நிமித்தம் ஹற்றன் – வட்டவளையில் வசித்தபோது இவர் 21.05.1942ம் திகதியில் பிறந்தார். இவரின் சகோதரர்கள் தற்போது அவுஸ்திரேலியாவிலும் கொழும்பிலும் வசித்து வருகிறார்கள்.
இளமைக்கல்வியையும் உயர்கல்வியையும் ஹற்றன்¸ அநுராதபுரம்¸ சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி¸ திருநெல்வேலி செங்குந்தா இந்துக்கல்லூரி ஆகிய இடங்களில் பயின்று தமிழ்¸ சிங்களம்¸ ஆங்கிலம் போன்ற மொழிகளையும் நன்கு கற்றுத் தேறி¸ புலமைப்பரிசில் பெற்று ரஷ்ஷியாவிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தார்.
நாட்டுக்குத்திரும்பி வந்து அரசபதவிகளில் அமர்ந்து பல திணைக்களங்களில் சுமார் 20 வருடங்கள் கடமைபுரிந்தார். இறுதியாக அவர் உயர்கல்வி அமைச்சில் கடமையாற்றினார். தமிழ்¸ சிங்களம்¸ ஆங்கிலம்¸ ஹிந்தி¸ ரஷ்ஷியா¸ யேர்மனி-டொச் ஆகிய மொழிகளை பேச¸ எழுத¸ வாசிக்க நன்கு கற்றுக்கொண்டிருந்தார் என்பது சிறப்பாகும்.
இவர் பல மொழிகளிலும் பாண்டித்துவம் பெற்றிருந்தபடியால் தனது பதவிக்காலத்தில் கூடுதலா அரச சட்ட மொழி மொழிபெயர்ப்பாளராகவே கடமைபுரிந்திருக்கிறார்.
தமிழ்¸ சிங்கள¸ இஸ்லாமிய¸ மலையக நண்பர்களுக்குக் குறைவே இல்லை. தான் வாழ்ந்த இடங்களிலெல்லாம் சகல இன மக்களுடன் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்துகாட்டினார். பின்பு நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளால் 1986ம் ஆண்டு அகதியாக யேர்மனிக்கு வந்து சேர்ந்தார்.
கல்வி¸ கலை¸ இலக்கிய¸ எழுத்துப்பணிகள்…
இவர் அரச திணைக்களங்களில் கடமைபுரிந்த காலத்தில் திணைக்களங்களின் தமிழ்¸ சிங்கள¸ ஆங்கில வெளியீடுகள்¸ சஞ்சிகைகள்¸ பிரசுரங்கள் போன்றவைகளின் ஆசிரியராகவும் செயற்பட்டிருக்கிறார். தினகரன்¸ வீரகேசரி பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் அவ்வப்போது எழுதிவந்திருக்கிறர்ர். தற்போது யேர்மனியில் வெளிவந்து கொண்டிருக்கும் “வெற்றிமணி” பத்திரிகை இலங்கையில் ஆரம்பித்து வெளிவந்தபோது அப்பத்திரிகைக்கும் நீண்டகாலம் எழுதியிருக்கிறார். யேர்மனிக்கு வந்தும் அப்பத்திரிகையின் எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார்.
யேர்மனியில் வாழ்ந்த காலத்தில் தான்வாழ்ந்த கீல் நகரின் தமிழ்ப்பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறைகொண்டு தமிழ்ப்பாடசாலை ஒன்றை உருவாக்கிப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்தார். வருடாவருடம் பல போட்டிகளை நடாத்தி தனது செலவில் பரிசில்களை வேண்டிக்கொடுத்து கல்விச் சமூகத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்.யேர்மனியில் வெளிவந்த வெளிவந்துகொண்டிருக்கின்ற பல சஞ்சிகைகள் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது பல ஆக்கங்களை எழுதியிருக்கிறார்.
யேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் (ஐரோப்பா) வளர்ச்சியில் ஆலோசனைகள்¸ வழிகாட்டல்கள் முன்னேற்றம் சம்பந்தமாகப் பல தடவைகள் பல விடையங்களில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புகளை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார். யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் 23 வது ஆண்டு விழாவில் (09.10.2012) கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியிருக்கிறார். இவ்விழாக்களில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
ஐரோப்பிய பல தமிழ் வானொலிகளில் பல தடவைகள் தனது அனுபவங்களையும் ஆளுமைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.; லண்டன் தமிழ் வானொலி அவரை விருந்தினர் வரிசையில் அழைத்து அவரின் பேட்டியை நேரடி ஒலிபரப்புச் செய்து கௌரவித்தது. இந்த வானொலியின் யேர்மனிய விழாக்களில் பல தடவைகள் சிறப்பு விருந்தினராகக்; கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
திருக்குறள்…
உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பை உலகமெல்லாம் பரப்ப அரும்பாடுபட்டிருக்கிறர் திருக்குறளைப் பாதுகாத்து உலகெல்லாம் பரவச்செய்ய வருடாவருடம் திருக்குறள் போட்டிகளை நடாத்தி தனது செலவில் பரிசில்களை வேண்டிக்கொடுத்து தமிழ்க் கல்விச் சமூகத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார். தான் வாழ்ந்த கீல் நகரில் திருக்குறளை ரஷ்ஷிய¸ டொச் மொழிகளில்¸ மொழி மாற்றம் செய்து ரஷ்ஷிய¸ போலந்து நாட்டவர்களுக்கும் யேர்மனிய நாட்டவர்களுக்கும் திருக்குறளின் சிறப்புகளைப் போதித்திருக்கிறார். மொழி¸ மதம் நிறம் கடந்த வாழ்வியல் நூல் திருக்குறள் என்பதை அவர்களுக்கும் நிரூபித்துக் காட்டினார்.
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன்..
இச்சங்கத்தின் அங்கத்தவராகச் சுமார் 15 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல விழாக்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியிருக்கிறார். இலங்கைப் இனப்போர் முடிந்து (18.05.2009) இலங்கையில் நடைபெற்ற அகில உலக எழுத்தாளர் மாகாநாட்டில்(10.01.2011) யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இலங்கை¸ இந்தியா¸ ஐரோப்பா¸ கனடா போன்ற நாடுகளிலிருந்து யேர்மனிக்கு வருகைதரும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும்¸ மற்றும் நூல்களின் வெளியீட்டு விழாக்களிலும் பல தடவைகள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இப்படியாக இவர் செய்த பணிகளின் சிறப்பைக் கண்ட இச்சங்கம் “வாழும்போதே தமிழுக்குப் பணிபுரிந்தவர்களைக் கௌரவிக்க வேண்டும்” என்ற நல் நோக்கில் யேர்மனிவாழ் ஐந்து முதிய எழுத்தாளர்களைக் சிறப்பிக்கும் நிகழ்வில் (27.04.2014) இவரையும் அழைத்து பொன்னாடை பூமாலை அணிந்து பாராட்டிக் கௌரவம் செய்த பொன்னான நிகழ்வும் நடந்தது.
“மண்” சஞ்சிகையோடு பணிகள்…
யேர்மனியில் கடந்த 30 வருடங்களுக்கும்மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் “மண்” கல்வி¸ கலை¸ இலக்கிய¸ சமூக சஞ்சிகையின் மிக நீண்டகால வாசகரும் எழுத்தாளருமான இவர் பல படைப்புக்களை எழுதியிருக்கிறார். வயது முதிர்ந்த காலத்திலும் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் அவர் தனது பேனாவுக்கு ஓய்வு கொடுக்கவில்லை. தான் இச்சமூகத்தில் வாழ்ந்ததற்கு அர்த்தம் வேண்டும் என்ற நோக்கால் பேனாபிடித்து எழுதமுடியாத சுழ்நிலையிலும் தொலைபேசியில் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கணனியில் அச்சுப்பதிவு செய்த நிகழ்வுகள் பல உண்டு.
அப்படி சமூகமுன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர் என்றே கூறலாம். மண் சஞ்சிகையின் ஆலோசகராகவும் உறுதுணையாளராகவும் எனது நல்ல நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அவ்வப்போது பிழைகளைச் சுட்டிக்காட்டவும் தவறுவதில்லை. இப்படி பல வழிகளிலும் உதவிபுரிந்த கல்விமானை பரிசில்கள் வழங்கி¸ எமது ஆண்டு விழாக்களில் பிரதமவிருந்தினராக அழைத்து கௌரவம் அளித்துப் பாராட்டியிருக்கிறோம்.
மனிதநேயப்பணிகள்..
இலங்கையில் வாழ்ந்த காலத்தில் செஞ்சிலுவைச் சங்கம்¸ சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை போன்ற தொண்டு நிறுவனங்களிலும் நிறைவேற்று உத்தியோகத்தராகவும் இலங்கையின் பல பாகங்களிலும் வேலை செய்தபடியால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கு உதவும் பொருட்டு¸ யேர்மனிய அரச தொண்டு நிறுவனங்களோடு அவ்வப்போது தொடர்புகளை ஏற்படுத்திப் பெரும் உதவிகளைச் செய்திருக்கிறார். தனிமனித முயற்சியாக தனது திறமைகளைப் பாவித்து தாயகத்தில் நடக்கமுடியாத நோயாளிகள்¸ மாற்றுத்திறனாளிகள்¸ வறியவர்கள் போன்றவர்களுக்கு உதவும் பொருட்டு இங்குள்ள உதவும் நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணி இரு தடவைகள் கப்பல் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட மூன்று சில்லு வண்டிகள்;¸ சைக்கிள்கள்¸ கைத்தடிகள்¸ ஊன்றுகோல்கள்¸ மருத்துவ பாவனைப்பொருட்கள்¸ உபகரணங்கள்¸ மருந்துகள் போன்றவற்றை அனுப்பியிருக்கிறார். அவை மட்டுமல்லாமல் தனது சொந்தப் பணத்தை இப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கொடுத்திருக்கிறார். இவரின் முயற்சியால் மண் சஞ்சிகையூடாகப் பல தடவைகள் பணம் அனுப்பப்பட்டன. உரியவர்களைச் சென்றடையப் பல வழிகளிலும பணிபுரிந்த மனிதநேயச் செயற்பாட்டாளரை தமிழ் உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டிய கடமை எமக்கு உண்டு.
மனிதன் பிறந்தான் உண்டான் வாழ்ந்தான்¸ இறந்தான் என்று இருக்காமல் தான் வாழ்ந்த இந்த மனித சமூகத்துக்குப் பல வழிகளிலும் உதவவேண்டும் என்ற நல்நோக்கில் வாழ்ந்துகாட்டிய இந்த முன்னோடியின் வாழ்க்கை எமக்கும் ஒரு பாடமாக அமையும் என எண்ணுவோம். இந்த மாமனிதனின் உன்னத பணிகளை மதிப்போம் போற்றுவோம். அவர் பணிகள் போல நாமும் செய்வோம். இச்சந்தர்ப்பத்தில் இந்த மனிதநேயப்பணியாளனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்கி நன்றிiயும் பாராட்டையும் தெரிவிக்கின்றோம். அன்னாரின் சாத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!…
சாந்தி!…சாந்தி!…
பிரதம ஆசிரியர் “மண்” சஞ்சிகை-யேர்மனி-