November 22, 2024

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!

கொழும்பு மாவட்டத்தின் மேலும் பல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி கொழும்பு- கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கட ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஹட்டன் நகரில் தற்போது ஐந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹட்டனில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு ஹட்டன் – டிக்கோயா நகரசபை அறிவுறுதல் வழங்கியுள்ளது.

ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஹட்டன் நகரில் சனநெரிசலைக் கட்டுப்படுத்த ஹட்டனில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு ஹட்டன் – டிக்கோயா நகரசபைநகரசபையினரால் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு கம்பஹாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கொவிட் 19 வைரஸ் தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாளைய தினம் திங்கட்கிழமை அதாவது 2020 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்கும் என கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.