இலங்கைக்கு இனி மீட்பில்லை?
சிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருப்பது பலர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்தின் அழிவிற்கான ஆரம்பம் என்பதைப்போன்றே, ராஜபக்ச யுகத்தை முடிவிற்குக்கொண்டு வருவதற்கான ஆரம்பமும் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதுடன் நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வீழ்ச்சி அல்லது அழிவு ஆரம்பமாகியிருக்கிறது என்று கூறமுடியும்.
1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை நீக்கவேண்டும் என்று சுமார் 40 வருடகாலமாக தற்போது ஆளுந்தரப்பில் இருப்பவர்கள் குரலெழுப்பி வந்திருக்கிறார்கள். அதன்பின்னர் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிகள் அனைவரும் நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை நீக்கப்படும் என்பதையே அவர்களது முதன்மையான வாக்குறுதியாக வழங்கியிருந்தனர்.
எனினும் ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்று கூறியவர்கள் அனைவரும், இப்போது அதையும்விட உயர்வான அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனூடாக நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் வசமிருந்த அதிகாரங்கள் நீக்கப்பட்டு, அவை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையை அவர் தன்னிச்சையாகவே நியமிக்க முடியும். மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தை அவர் விரும்பும்பட்சத்தில் இரண்டரை வருடங்களுக்குள்ளாக கலைக்க முடியும்.
அதேபோன்று எம்மால் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களால் நாட்டின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது 20 ஆவது திருத்தத்தின் ஊடாக அவற்றுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காகவா இந்த நாட்டுமக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமது வாக்குகளை வழங்கினார்கள்? ராஜபக்ச குடும்பத்தினர் கற்காலத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்வதற்கே முற்படுகின்றனர்.
கடந்த காலத்தில் பௌத்த, கத்தோலிக்க மதத்தலைவர்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினரும் 20 ஆவது திருத்தம் வேண்டாம் என்றும், புதிய அரசியலமைப்பே தேவை என்றுமே வலியுறுத்தினர்.
எனினும் ‚சிங்கள பௌத்த அரசாங்கம்‘ என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருப்பது பலர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாம் ஒரு இனவாதக்கட்சி அல்ல. ஆனால் இன்றளவிலே இனவாதக் குழுவொன்று பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், தமது தேவைக்கேற்றவாறு செயற்படுகின்ற நிலை உருவாகியிருக்கின்றது.
எனினும் இந்த 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்தின் அழிவிற்கான ஆரம்பம் என்பதைப்போன்றே, ராஜபக்ச யுகத்தை முடிவிற்குக்கொண்டு வருவதற்கான ஆரம்பமும் இதுவே என்று நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.