November 22, 2024

முன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மயூரன் கட்சியின் செயலாளரினால் அன்மையில் நீங்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர் மயூரன் தனது சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக குறித்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிமன்றினால் இந்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது யாழ் மாநகர உறுப்பினர் மயூரன் சார்பில் ஆஐரான சட்டத்தரணி மணிவண்ணன் தனது தரப்பு நியாயங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

இதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6 ஆம் திகதி வரை யாழ் மாநகர சபை உறுப்பினரை பதவி நீக்குவதற்கு இடைக்கால தடை உத்தரவை வழங்கினார். அத்துடன் எதிர்த்தரப்பில் குறிப்பிடப்பட்ட முதல் எதிரியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்தராசாவினையும் இரண்டாம் எதிரியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கினை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.