November 22, 2024

நிமல் போல இனி யாருமில்லை?

20வருடங்கள் கடந்தும் அனைத்து மக்களாலும் நிமலராஜனை அவனது பணியை நினைவுகூர்ந்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் குருபரன்

தனது பதிவினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் 2000 ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வியாழக்கிழமை இரவு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையிலான மோதல் குறித்த ஒரு முக்கிய செய்தியை, சூரியன் fm வானொலியின் இரவுச் செய்திக்காக நிமலராஜன் வழங்கி இருந்தார்.

வழமையாக கையால் எழுதி Faxல் செய்திகளை அனுப்பும் அவர், ஒரு வித பதட்டத்துடன் அன்றைய இரவுச் செய்தியை தொலைபேசியில் சொல்ல, நான் குறிப்பெடுத்து செய்தியாக்கினேன்.

நெருக்குதலான அந்தக்காலக்கட்டம் நேரடி – மறைமுக செய்தித் தணிக்கைகள் இடையிட்டு வந்து செல்லும் காலம். தனக்கு அக்காலத்தில் நிலவிய அச்சுறுத்தல் குறித்து என்னுடன் பலமுறை உரையாடியும் இருந்தார்.

அவரது பாதுகாப்பு குறித்து தெரிவித்த ஆலோசனைகளையும் மீறி, ஊடகத்துறையை அதிகமாக நேசித்த ஒரு உணர்வுள்ள ஊடகப் போராளி. இடைவிடாது உழைத்த ஒரு உன்னத ஊடகவியலாளன்.

சூரியன் எவ். எம் செய்திகள் அக்காலத்தில் மிகப்பிரபல்யம் அடைவதற்கு காரணமாய் இருந்த ஊடகர்களில் நிமலராஜன் மிக முக்கியமானவர். அதுபோல் சூரியன் எவ்.எம் பிறேக்கிங் நியூஸ் பிரபல்யம் அடைவதற்கும் அவர்தரும் உடனடிச் செய்திகளும் காரணமாய் இருந்தன.

ஆனால் அன்று அவர் தந்த செய்திதான் அவரது இறுதிச் செய்தியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இரவுச் செய்திகள் முடிந்து அலுவலக வாகனத்தில் வீடு சென்ற நான், இரவு உணவை முடித்து தூக்கத்திற்கு சென்ற சிறிது நேரத்தில், இதே ஒக்டோபர் 19 ஆம் திகதி இலங்கை நேரம் இரவு 11.45 அளவில் கையடக்கத் தொலைபேசி அலறியது.

நிமலராஜன் வீட்டிற்கு குண்டு வீசபட்டதுடன் அவர் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும், கடும் காயத்திற்கு உள்ளான அவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் எனவும், மறுமுனையில் இருந்த ஒருவர் (ஞாபகம் இல்லை) சொன்னார். அடுத்த 5 நிமிடத்தில் 11.50 இருக்கும் என நினைக்கிறேன் பிறேக்கிங் நியூஸ் தரும் நிமலராஜன் பற்றிய பிறேக்கிங் நியூஸை, வீட்டில் இருந்து தொலைபேசியூடாக வானொலியில் அறிவித்தேன்.

அடுத்த சில நிமிடத்தில் மயில்வாகனம் நிமலராஜன் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்ற செய்தியும் பிறேக்கிங் நியூஸாக ஒலிபரப்பினோம்.

யுத்தகாலத்தில் யாழில் நடமாடவே பயந்த சூழலில் ஒரு துவிச்சக்கர வண்டியில், பறந்து திரிந்து செய்திகளை சேகரித்து உடனுக்கு உடன் அனுப்பும், துணிவையும், வேகத்தையும் அதன் பின்னர் இலங்கையில் பணிபுரிந்த 8 வருடத்தில், உண்மையில் நான் எவரிடமும் காணவில்லை.

நிமல ராஜனின் மரணத்தின் பின்னான சில நாட்களில், அவரது படுகொலைக்கு நீதி கேட்டு, நான் உட்பட தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள், சிங்கள ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகள், மனித உரிமை, மற்றும் மனிதநேய அமைப்புகள் அவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம் இது.