மன்னர் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாணவர்கள்! தாய்லாந்து மன்னர் குடும்பத்துக்கு நெருக்கடி!
தாய்லாந்து நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக தற்போது எழுந்துள்ள மாணவர் போராட்டம், அந்நாட்டிலுள்ள பல குடும்பங்களில் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.உலகளவில் மன்னர் குடும்பம் செல்வாக்கு பெற்று விளங்கும் ஒருசில நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. இங்கு, அரசியலமைப்பு அடிப்படையிலான மன்னராட்சி நடைபெறுகிறது.
ஆனால், தற்போது புனிதமாக கருதப்படும் அந்நாட்டின் அரசக் குடும்பத்திற்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. மன்னர் குடும்பத்திற்குள்ள மட்டற்ற அதிகாரங்கள் மற்றும் நிதி செலவினங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், மன்னர் குடும்பத்தை தெய்வமாக கருதும் பழைய தலைமுறையினர் இந்தப் போராட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், ஒரு குடும்பத்திற்குள்ளேயே, தந்தை – மகன், சகோதரர்கள், சகோதரிகள், தாத்தாக்கள் – பேரன்கள் இடையே பூசல்களும் ஏற்பட்டு, பிளவுபட்டு காணப்படுகின்றனர் மக்கள்.
தற்போதைய புதிய மன்னர் மகா வஜிரலோங்கான் மீது கடுமையான அதிருப்தி நிலவுகிறது. ஆனால், மன்னர் குடும்பத்தை புனிதமாகவே பார்த்துப் பழகிவிட்ட பழைய தலைமுறையினருக்கு, புதிய தலைமுறையைச் சார்ந்த மாணவர்களின் போராட்டத்தில் விருப்பமில்லை.
அந்நாட்டில், சினிமா தியேட்டரில்கூட அரச கீதம் இசைக்கப்பட்டால் எழுந்துநிற்க வேண்டும். அங்கு மன்னராட்சியை விமர்சித்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
தாய்லாந்தில் குழந்தைப் பருவம் முதலே மன்னர் குடும்பத்தைப் பற்றிய புனிதத்துவம் கற்பிக்கப்படுகிறது. அதேசமயம், அதை விமர்சித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் போதிக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், தற்போது நடைபெற்றுவரும் மாணவர் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. போராட்டங்களை ஒருங்கிணைக்கும் மாணவர் தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், போராட்டம் தொடர்கிறது இதனால் அந்நாட்டு மன்னர் குடும்பத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.