தாமதமாக தனித்து வந்த சுமா?
புதிய தமிழ் கட்சிகளது கூட்டில் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்துள்ளார்.
ஆயினும் எம்.ஏ.சுமந்திரன் அலர்ஜியியினால் அனந்தி கோபித்துக்கொண்டு சென்றுள்ளார்.
தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாகவும் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் இன்று யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த மாதம் அனைத்துக் கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் முகமாக இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 10.30 மணியளவில் ஆரம்பமாகவிருந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதற் தடவையாக வந்திருந்ததை அடுத்து அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து வெளியேறினார்.
இதேவேளை சுமந்திரன் வருகை தர உள்ளார் என்ற தகவலை அறிந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.