நீட் தேர்வில் நடந்த குளறுபடி திட்டமிட்டு நடந்தது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளது
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திட்டமிட்ட முறைகேடுகள், தில்லுமுல்லுகள், ஏன் மோசடிகள்தான் நீட் தேர்வு! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது, இடஒதுக்கீடு-சமூக நீதி என்று இருக்கக் கூடாது என்கிற வக்கிர நோக்கிலான நீட்டை ஒழிக்க, மக்கள் படை திரண்டெழ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவு நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன. பின்னர் பழைய அறிவிப்பில் குளறுபடி இருந்தது சர்ச்சையானதை தொடர்ந்து புதிய நீட் தேர்வு பகுப்பாய்வு முடிவு வெளியிடப்பட்டது.
அதே சமயம் விடைக்குறிப்பு ஒப்பிட்டு பார்க்கும்போது கிடைத்த மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக தேசிய தேர்வு முகமைக்கு ஏராளமான மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளது கூடுதல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது .