November 25, 2024

துரோகியின் வரலாற்றைப் படமாக்க வேண்டாம் – பாரதிராஜா

விளையாட்டு வீரராக என்ன சாதித்தாலும் தன் சொந்த மக்கள் செத்து விழுந்த போது சிரித்து மகிழ்ந்தவர். சாதித்து என்ன பயன்? என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அந்த கண்டன அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“விஜய் சேதுபதிக்கு மக்கள் அதீத அன்பை வெகுசீக்கிரமே கொடுத்துள்ளனர். அவருடைய இயல்பான பேச்சும், யதார்த்தமான நடிப்பும் பாராட்டுக்கிரியது. அவர் இன்னும் வெற்றி பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

அவர் செய்யவிருக்கும் ‘800’ என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். ஈழத்தமிழ் மக்கள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முரளிதரன். சிங்கள இனவாதத்தை முழுமையாக ஆதரித்தவர். விளையாட்டில் சாதனை படைத்தாலும் தன் சொந்த மக்கள் செத்த போது சிரித்தவர் சாதித்துத் தான் என்ன பயன்?

ஒரு இனவெறுப்பாளனின் முகத்தை உங்கள் முகமாக காலம் காலமாக நாம் வெறுப்போடு பார்க்க விரும்பவில்லை. இந்தப் படத்தைத் தவிருங்கள். இது உலகத்தமிழர் சார்பாக எனது வேண்டுகோள்” என்றுள்ளார்.

மேலும், குறித்த படக்குழுவை சாடியுள்ள பாரதிராஜா,

” முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி. துரோகியின் வரலாற்றைப் படமாக்க வேண்டாம்.

நீங்கள் படம் எடுக்க விரும்பின் அஹிம்சை வழியில் போராடி வீழ்ந்த மாவீரன் தியாகி திலீபனின் வரலாறைப் படமாக்குங்கள். இல்லையேல் அந்த மகத்தான மாவீரர் தலைவனைப் படமாக்குங்கள். நாங்கள் இலவசமாக வந்து வேலை செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக டுவிட்டரில் #shameonvijaysethupathi என்ற ஹாஸ்டக் மூலமாமூலமாக இந்திய அளவில் எதிர்ப்பு போஸ்ட்கள் மக்களால் போடப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.