November 22, 2024

தென்னையை பயிரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை!

தரிசு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வயல் நிலங்களில் தென்னையை பயிரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வாழ்க்கைச் செலவுக் குழுவுடன் இன்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறை சிறுபோகம் மற்றும் பெரும் போகத்தின் போது அதிக நெல் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளதால் எதிர்காலங்களில் நெல் அறுவடைகளை கொள்வனவு செய்யும் போது முறைமையொன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.

நாட்டின் அனைத்து பிரதேசங்களினதும் அறுவடைகளை இடைத்தரகர்களின் சம்பந்தமின்றி விற்பனை செய்யும் வசதியை விவசாயிகளுக்கே நேரடியாக கிடைக்கும் சூழலை ஏற்படுத்தி அதனை ஆரம்பிக்க முடியும்.

விவசாயிகளுக்கு அதிக விலையும் நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் வகையிலான சந்தையை உருவாக்க வேண்டும்.

தரிசு நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 50000 ஹெக்டயர் காணியில் புதிதாக தென்னையை பயிரிடுவதை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை தட்டுப்பாடின்றி அனைத்து பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய வாழ்க்கைத் தரம் மற்றும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள கஷ்ட நிலைமைகளை கவனத்திற் கொண்டு பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி ஜனாதிபதியால் நேற்று நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.