முல்லைத்தீவு ரௌடிகளுடன் செல்பியெடுத்த வனவள திணைக்கள அதிகாரி… முல்லைத்தீவில் நடந்தது என்ன?
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (12) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகியோர் மீதே இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரக்கடத்தில் ஈடுபட்ட முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் தாக்குதல் நடத்திய நபர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 20ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் வன வள திணைக்கள உத்தியோகத்தர் சிலரின் ஒத்துழைப்புடனும் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலரின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல செயற்படும் நான்கு பேர் கொண்ட வன்முறைக் குழு ஒன்று ஊடகவியலாளர்கள் இருவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறிப்பு பகுதியைச் சேர்ந்த ரவுடி தலைமையிலான குறித்த குழு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. அந்தப் பகுதியில் காணப்படுகின்ற தேக்கு மற்றும் முதிரை மரங்களைக் கடத்தும் நடவடிக்கையை வழமையாகக் கொண்டு செயற்படும் அந்தக்குழு அடிதடி வன்முறையில் ஈடுபட்டுவரும் வழக்கத்தையும் கொண்டு காணப்பட்டு வந்திருக்கிறது.
இது குறித்து விரிவாக தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் 40 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உள்ள தேக்கு மரங்கள் அரசமர கூட்டுத்தாபனத்தின் ஊடாக வெட்டி எடுப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் குறித்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த ஒருவர் மரம் வெட்டும் மற்றும் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட வன பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் குறித்த பகுதிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குறித்த நபரது குழுவினை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
இதனைத் தமக்கு காப்பரணாக பயன்படுத்திய குறித்த குழுவினர் குறித்த நபருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட 20 கெக்டேயருக்கு மேலதிகமாக அந்த பகுதியில் இருக்கின்ற வனப் பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்களை வெட்டி விற்பனை செய்வதும் குறித்த மரத்தின் ஊடாக மரத்திலான ஒரு மாடி வீட்டினையும் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நீண்டகாலமாக குறித்த மரக்கடத்தல் தொடர்பில் குமுழமுனை மற்றும் முறிப்பு பகுதி மக்களால் பொறுப்புவாய்ந்த தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.
அந்தக் குழுவுக்கு தலைமை தாங்கும் நபர் தேக்கு மரத்தினாலான மரவீடு ஒன்றை அமைத்துவருவதாகவும் அதனையாவது வெளியில் கொண்டுவருமாறும் முறிப்பு மற்றும் குமுழமுனை மக்கள் ஊடகவியலாளர்கள் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோரிடம் கோரிக்கைவிடுத்திருகின்றனர் .
இதனை அடுத்து நேற்று காலை குறித்த தேக்கு மரங்கள் அறுக்கப்படும் 40 ஹெக்டேயர் நிலப் பரப்பையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக அறுக்கப்படுகின்ற மரங்கள் தொடர்பாகவும் செய்தி சேகரித்த பின்னர் குறித்த நபர் மரத்தில் அமைக்கும் வீட்டினை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்ப முற்பட்டபோது குறித்த நபரும் அவருடைய கையாட்கள் மூவரும் வாச்சி, வாள் கொட்டன் தடிகள், இரும்புக்கம்பிகளால் இருவரையும் கடுமையாகத் தாக்கி பணயக் கைதிகளாக்கியிருக்கின்றனர்.
பின்னர் ஊடகவியலாளர்களின் தொலைபேசி மற்றும் கேமராக்களை பறித்து அதில் இருந்த காட்சிப் பதிவுகளை அளித்ததோடு அவர்களுடைய ஆவணங்கள் சிலவற்றையும் , அவர்களிடம் இருந்த , 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டிருக்கின்றனர்.
ஊடகவியலாளர்களை சிறைபிடித்த குறித்த நபர்கள் ஊடகவியலாளர்கள் இருவரையும் திருடர்கள் என்று தெரிவுக்குமாறு நிர்ப்பந்தித்து வீடியோவாகவும் தமது தொலைபேசி கமெராக்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
அதன் பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் .
இதன்பின்னர் குறித்த இடத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விடயங்கள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக வன பாதுகாப்புத் திணைக்களத்தின் குறித்த பகுதிக்கு பொறுப்பான அதிகாரி குறித்த சட்ட விரோத குழுவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதோடு அவர்களோடு மிக நெருக்கமாக செல்பி எடுத்து எடுத்து அதோடு அவர்கள் கலந்து கொண்ட பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதோடு தேர்தல் காலத்தில் அரசியல் மேடையில் குறித்த குழுவோடு அரசியல்வாதி ஒருவரை சந்தித்து உள்ளதோடு இவ்வாறு நீதிமன்றங்களில் சட்டவிரோத செயற்பாடுகளால் குற்றவாளியாக பல முறை அடையாளம் காணப்பட்ட நபருக்காக துணை நிற்பது அம்பலமாகியுள்ளது.இதேபோன்று குறித்த குழுவிற்கு முள்ளியவளை பகுதி பொலிஸாரின் முழுமையான ஆதரவுகளும் இருப்பதாக குற்றம்சாட்டி சென்ற குறித்த பகுதி மக்கள் இவ்வாறான ஆதரவுகளை காரணமாக வைத்து இவர்கள் அந்த பகுதியில் உள்ள பல நபர்கள் மீது தாக்குதல்களை நடத்தும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை செய்வதும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த குழுவினர் விசேட படையினரின் (SF) ஆயுதங்களை தாக்கி பறித்த குற்றச்சாட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு முறிப்பு கிராமத்தில் சட்டத்துக்கு முறம்பாக காடுகளை அழித்து பாரிய பண்ணைகளை அமைத்துள்ள முஸ்லீம் தனவந்தர்களின் ஆதரவோடு காணிகளை அபகரித்து பண்ணை களை அமைக்க துணை நிற்பவர் என்பதும் குறிப்பிட தக்கது.