ஆஸ்திரேலியாவுக்குள் ‘அகதிகள்’ அனுமதிக்கப்படும் எண்ணிக்கை தடாலடியாக குறைப்பு
2020-21 ஆஸ்திரேலிய நிதியாண்டில் அந்நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை முந்தைய எண்ணிக்கையை விட 25 சதவீதம் குறைக்கப்பட்டு 13,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 18,750 அகதிகள் மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.மனிதாபிமான ரீதியில் அகதிகளை எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையில் செய்யப்பட்டுள்ள இக்குறைப்பு, சுமார் 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மிச்சப்படுத்தும் என 2020- 21 ஆஸ்திரேலிய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவுக்கு சூழலுக்கு இடையே குறைக்கப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை குறித்து பெரும் அதிருப்தியை அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று சூழல் இடையே தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலியாவின் இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் மேலும் உதவிகள் கிடைக்கும் என நினைத்தோம் எனக் கூறியுள்ள தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் பிரச்சார இயக்குனர் ஜன்னா பவேரோ, ஆனால் ஆஸ்திரேலிய அரசு அதற்கு மாறாக நடந்து கொண்டுள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் இந்த நகர்வு மனிதாபிமான ரீதியில் அகதிகள் நடத்தப்படுவதன் மீது விழுந்த பெரும் அடி என அவர் தெரிவித்துள்ளார்.
“அரசு உதவிகளை அதிகரிக்காதது மட்டுமின்றி, ஏற்கனவே மனிதாபிமான ரீதியில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையையும் குறைத்துள்ளது,” எனக் கூறியுள்ளார் பவேரோ.
“2020- 21 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக 958.3 மில்லியன் டாலர்கள் செலவைக் குறைக்கும்,” என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொடர்ந்து கடல் கடந்த தடுப்புக்கு செலவு செய்வதை அதிகரிப்பது அந்த சேமிப்பை அர்த்தமற்றதாக்கிவிடும் என தஞ்சக்கோரிக்கையாளர் வள மையமும் ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சிலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவை நோக்கிய கடல் வழியிலான வருகைகளை மேலாண்மை செய்ய கடந்த நிதியாண்டில் ஆஸ்திரேலிய உள்துறை 961 மில்லியன் டாலர்க்ளை செலவழித்துள்ளது. தற்போதைய நிதியாண்டான 2020-21ல் இதற்காக 1.19 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை நிரந்தரமாக குறைத்துள்ள செய்தி தங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சிலின் பால் பவர்.