November 22, 2024

வெறிச்சோடிய குறிக்கட்டுவான்: தனித்தது குடாநாடு?


யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு, அனலைதீவு முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக மேலும் காரைநகரில் 5 ற்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 411 குடும்பங்களைச் சேர்ந்த 868நபர்கள் சுயதனிமைப் படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள் புங்குடுதீவில் சுமார் 127 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மற்றும் அனலைதீவுபகுதிகளில் திட்டமிட்ட படி தரம் 5 புலமைப்பரிசில், க பொ த உயர்தர பரீட்சைகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாழ் மாவட்டத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

புங்குடுதீவில் கொரணா தொற்றுக்குள்ளான நபர் பயணம் செய்த பஸ் வண்டியில் பயணித்தவர்கள் விபரங்கள் கோரப்பட்டது.இன்றுவரை 15 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எப்போதும் மக்கள் நிரம்பி வழியும் குறிக்கட்டுவான் இறங்குதுறை வெறிச்சோடி போயுள்ளதாக தெரிவித்துள்ள அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் 1990ம் ஆண்டுகளை அது நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார்.