இடமாற்றம்: மாகாணசபைக்கெதிராக போராட்டம்?
மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்கள சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (08) காலை முன்னெடுக்கப்பட்டது.
வட மாகாணத்தில் யுத்த காலத்திலும் சரி, தற்போதைய கொரோனா காலப் பகுதியிலும் சரி அர்ப்பணிப்புடன் சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றிவரும் தங்களை, வேறு திணைக்களங்களுக்கு நியமிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வேறு எந்த மாகணங்களிலும் இல்லாத முறைமை வடக்கு மாகாணத்தில் காணப்படுவதாகவும் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடாக மாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதில்களும் மாகாண பிரதம செயலாளரினால் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தங்களுக்குத் தொடர்ந்து சுகாதார திணைக்களத்தினுள்ளேயே நியமனங்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்றிருந்த மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் தமது கோரிக்கையை முன்வைத்ததுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.